கல்லடி புனித இஞ்ஞாசியாரின் பெயர்கொண்ட திருநாள் ஆயர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

(uk batti)

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பாதுகாவலரும், கல்லடி – டச்பார் பங்கின் பாதுகாவலருமான புனித இஞ்ஞாசியாரின் வருடாந்த திருவிழா நிகழ்வானது கடந்த 25.07.2014 வெள்ளிக்கிழமை பங்குத்தந்தை அருட்பணி ஜீவன் அடிகளார் தலைமையில் திருக்கொடியேற்றும் நிகழ்வுடன் ஆரம்பமானது.

இவ்வருடாந்த திருவிழாவின் ஒன்பது நவநாட்களிலும் இத்திருவிழா நிகழ்விற்காக விஷேடமாக இந்தியாவிலிருந்து வருகைதந்த தமிழ்நாடு இயேசுசபை துறவி அருட்பணியாளர் செபமாலை இருதயராஜா அடிகளாரினால் மனித உரிமையுடன் தொடர்புடைய சிறந்த தலைப்புக்களை கொண்ட மறையுரையுடனான திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றது.

திருவிழா நிகழ்வின் ஏழாவது நவநாளாகிய நேற்றைய தினம் 31.07.2014 வியாழக்கிழமை புனித இஞ்ஞாசியாரின் பெயர்கொண்ட திருநாள் திருப்பலியானது மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஆயர் அவர்களை கல்லடி இஞ்ஞாசியார் சதுக்கத்திலிருந்து மாலை அணிவித்து வரவேற்று , கலாசார வன்ட் வாத்திய இசையுடன் பவனியாக அழைத்து செல்லப்பட்டு, தமிழர் பாரம்பாரிய முறைப்படி ஆராத்தி எடுக்கப்பட்டு அதன் பின்னர் ஆயரினால் புனித இஞ்ஞாசியாரின் பெயர்கொண்ட திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இன்றைய தினத்தில் ஆயரினால் முதல்நன்மை, உறுதிப்பூசுதல் எனும் திருவருட் சாதனங்கள் பங்கின் சிறார்களிற்கு வழங்கப்பட்டதுடன், இன்றைய திருவிழா நிகழ்வில் அருட் சகோதரர்கள், அருட் சகோதரிகள் மற்றும் இறைமக்கலென  அதிகளவிலானோர் பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கது.