திவிநெகும - VI ஆம் கட்டம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டும் கருத்தரங்கு

(உ.உதயகாந்த்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ள வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆறாம் கட்ட வேலைத்திட்டம் தொடர்பாக, அத்திட்டத்தில் உள்வாங்கப்படும் ஆலையடிவேம்பு பிரதேச அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டும் கருத்தரங்கு நேற்று (28) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி (திவிநெகும) திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் ஐ.அலியார் பங்கேற்றதுடன், நாடு முழுவதும் 25 இலட்சம் மனைப் பொருளாதார அலகுகளை வலுவூட்டும் நோக்கோடு “எங்கள் வீட்டுத்தோட்டத்திலிருந்து எங்களுக்கான மரக்கறிகள்” என்ற எண்ணக்கருவில் எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆந் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த வேலைத்திட்டம் தொடர்பான முக்கிய விடயங்களைப் பங்குபற்றிய உத்தியோகத்தர்களிடையே பகிர்ந்துகொண்டார். அத்துடன் இவ்வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரதும் கடமை, பொறுப்புக்கள் தொடர்பாகவும் விரிவான விபரங்களை வழங்கினார்.

இக்கருத்தரங்கில் அக்கரைப்பற்று கமநல சேவைகள் பெரும்பாக உத்தியோகத்தர் ஏ.அமீர், ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. ரி.கிருபைராஜா, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, ஆலையடிவேம்பு பிரதேச வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமைபீட முகாமையாளர் கே.நேசராஜா, ஆலையடிவேம்பு தெற்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் கே.அசோக்குமார், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார மருத்துவமாதுக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.