LED மின் விளக்குகளை உருவாக்குதல், பழுதுபார்த்தல், சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி

(உ.உதயகாந்த்)

Practical Action நிறுவனத்தின் கல்முனை பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மின்னிணைக்கும் தொழிலாளர்களுக்கான LED மின் விளக்குகளை உருவாக்குதல், பழுதுபார்த்தல் மற்றும் சந்தைப்படுத்தல் என்பன தொடர்பான இரண்டுநாள் பயிற்சிச் செயலமர்வு கடந்த 22, 23 ஆகிய தினங்களில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

குறிப்பிட்ட பயிற்சி நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த மின் பொறியியலாளர் ரோஹித ஆனந்த தலைமையில் எஸ்.கமலநாதன், எஸ்.பி.ராஜா மற்றும் ரி.புவநேந்திரராஜா ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு இப்பயிற்சிகளை நடாத்தினர்.

இப்பயிற்சிகளின்போது தற்போது பானைக்குட்படுத்தப்பட்டுவருகின்ற CFL விளக்குகளுக்கு மாற்றாக மின்பாவனையை அதிகளவில் சிக்கனப்படுத்தக்கூடிய LED மின் விளக்குகளின் பாவனையின் அவசியம்பற்றி விளக்கப்பட்டதுடன், பங்குபற்றிய மின்னியல் தொழிலாளர்களுக்குத் தமது வீட்டிலிருந்தவாறே மூலப்பொருட்களைப் பயன்படுத்தி LED மின் விளக்குகளைத் தயாரிக்கும் முறை, பழுதடைந்த விளக்குகளைத் திருத்தம் செய்து மீள்பாவனைக்கு உட்படுத்தும் வழிமுறைகள் தொடர்பான செயன்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், தயாரிக்கப்பட்ட LED விளக்குகளைச் சந்தைப்படுத்தும் மார்க்கங்கள் மற்றும் விற்பனையின்போதான இலாப வீதத்தினைத் தீர்மானிக்கும் முறைகள் பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

அத்துடன் இவ்வகை மின் விளக்குகளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய இடங்கள் தொடர்பான தகவல்களும் பரிமாறப்பட்டதுடன், மின் பொறியியலாளர் ரோஹித ஆனந்தவின் அழைப்பை ஏற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் மின்னியல் தொழிலாளர்களின் செயன்முறைப் பயிற்சிகளைச் சென்று பார்வையிட்டார்.