மட்டக்களப்பு மாவட்ட புணாணை மேற்கு முறுத்தானை மீள் குடியேற்றம் முற்றுப்பெறவில்லை - மக்கள் முறைப்பாடு

வன்செயல் காரணமாக இனப்படுகொலைகள் அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்டன என்பதையும் அதன் காரனமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு இது வரை மீள்குடியேற்ற உதவிகள் அரசினாலோ அல்லது அரசசார் பற்ற நிறுவனங்களினாலோ வழங்கப்படவில்லை என புணானை மேற்கு, முறுத்தானை பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் முறையிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிவில் பிரசைகள் சபையிடம் பொதுமக்கள் நேற்றைய தினம் இந்த முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.
இப்பிரதேசத்தில் சனிக்கிழமை காலை 10.00 தொடக்கம் பிற்பகல் 02.00 மணிவரை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் முறையிட்டனர் (16.08.2014).
இந்தமக்கள் சந்திப்பு சரீப் அலி ஆசிரியர் அமைப்பின் தலைவர் வை. எல் மன்சூர் ஆகியோரது இணைப்பாக்கத்தில் பொத்தானை பள்ளிவாசல் முற்றத்தில் நடைபெற்றது.


இச் சந்திப்பு குறித்தும் மக்களது கருத்துப் பகிர்வுகள் குறித்தும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ் கருத்து வெளியிடுகையில்,
யுத்தத்திற்கு பின்னரான மட்டக்களப்பு மாவட்ட மீள்குடியேற்ற நடவடிக்ககைளில் புணாணை மேற்கு மற்றும் முறுத்தானை  ஆகிய கிராமசேவை பிரிவுக்குற்பட்ட பொத்தானை, மயிலந்தனை, புணாணை, காரையடிப்பட்டி, முருங்கையடிப்பட்டி, களுவாமடு,நாவன்னாவழி, கிடச்சிமடு, மாக்குப்ப, மினுமினுத்தவெளி, அதிகாரிவில், அக்குராண,சின்னஅக்குராண, தட்டாவெளி, காஞ்சிலங்காடு ஆகிய கிராமங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.

அப்பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் முஸ்லிம் பொதுமக்களும் ஆலயங்கள், பள்ளிவாசல்,மற்றும் அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டு தத்தமது குறைகளையும் தேவைகளையும் விபரித்தனர்.
அதிலும் குறிப்பாக கடந்த 2009 முதல் தமது வீட்டு வசதிகள் உட்கட்டுமான வசதிகள் இது வரைஎந்தத் தரப்பினராலும் ஏற்படுத்தித்தரப்படவில்லை என்பதையும் சட்டபூர்வ மானபாசன வசதிகள் அதிகாரிகளின் அசமந்த போக்கினால் தூர்ந்து கிடக்கின்றன என்பதையும் வன இலாகா அதிகாரிகள் எமது குடியிருப்பு காணிகளை அபகரித்து வருகின்றார்கள் என்பதையும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மேற்படி கிராமங்களில் வன்செயல் காரணமாக இனப்படுகொலைகள் அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்டன என்பதையும் அதன் காரனமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு இது வரை மீள்குடியேற்ற உதவிகள் அரசினாலோ அல்லது அரசசார் பற்ற நிறுவனங்களினாலோ வழங்கப்படவில்லை என பொதுமக்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன் குடிநீர் வசதிகள், மின்சாரம், வீதி, பாலம், பாடசாலை, அரச அலுவலகங்கள், ஆலயங்கள் போன்றவை இப்பகுதிக்கு வழங்கப்படவில்லை.
ஏறக்குறைய 15,000ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் காரணமாக கைவிடப்படும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன என்றும் பொதுமக்கள் முறையிட்டனர் எனவும் தெரிவித்தார்.

பொத்தானை பள்ளிவாசல் தலைவர் அகமது லெப்பை ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்து ஆலய தலைவர் எஸ்.யோகராசா, வட்டவிதானையார் கே.இராசலிங்கம் மட்டக்களப்பு சிவில் பிரசைகள் தலைவர் வ.கமலதாஸ், உபதலைவர் ஜே.எல்.ஜுனைதீன் (நளீமி), இணைப்பாளர் ஜனாப் அன்வர் உட்பட பல பொதுமக்கள் கலந்துகொண்டனர்.