( ரவிப்ரியா )
மண்முனை தென்எருவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சிமடம், மகிளுர், குறுமண்வெளி, , பட்டிருப்பு, களுவாஞ்சிக்குடி, தேற்றாத்தீவு ஆகிய 8 கிராமங்களிலும், நேற்று வெள்ளிக்கிழமை அரசின்
கிராமத்திற்கொரு வேலைத் திட்டத்தின் கீழ் தலா பத்துலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கொங்கிறீற் வீதிகள் அமைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் குறித்த கிராமங்கள் தோறும் நடைபெற்றது.
முதலாவது ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு காலையில் பெரியகல்லாற்றில் வைபவ ரீதியாக நடைபெற்றது. பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் காளி கோயில் வீதியை கொங்கிறீற் வீதியாக மாற்றும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் பிரதேச செயலக பிரதி திட்டப் பணிப்பாளர் திருமதி அ.பாக்கியராஜா, உதவி திட்டப் பணிப்பாளர் ச.சசிகுமார், சமுர்த்தி முகாமைப் பணிப்பாளர் வரதராஜன், கல்லாறு திவிகெகும வங்கி முகாமையாளர் தவேந்திரன், பெரியகல்லாறு கிராம உத்தியோகத்தர்களான எஸ்.ஞானசிறி, இராதாகிருஸ்ணன், குலதுங்கன், மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் மாதர் சங்க அங்கத்தவர்கள், பொதமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





























