(சிவம்)பொலித்தீன் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்களை வெளிப்படுத்தி பொலித்தீன் பாவனையை முற்றாக கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நகரில் இன்று வியாழக்கிழமை (04) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஊர்வலம் காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமாகி முனை வீதி, மத்திய பஸ்நிலையம், புனித அந்தோனியார் வீதிவளியாக மாநகரசபை சென்றடைந்தது.
பிளாஸ்டிக் போத்தல்களுக்குப் பதிலாக கண்ணாடிப் போத்தல்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் கூடைகளுக்குப் பதிலாக பிரம்பினாலான கூடைகளைப் பயன் படுத்துமாறு கோரி பதாதையை ஏந்தித் சென்றனர்.
மாநகரசபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் மாநகர சபை அலுவலகத்திலும் மற்றும் வீடுகளிலும் பொலித்தீன் பாவனையை தடைசெய்தலுக்கான மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்தனர்.
அத்தோடு குடிநீரைப் சேகரிப்பதற்காக மாநகர சபையினால் கண்ணாடியிலான போத்தல்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.
யுனொப்ஸ் பிரதிநிதிகள், சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவினர், மாநகர ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.



















