பெரியகல்லாற்றில் வைஎம்சிஏ கமம் போக் உயர் பாடசாலையின் கட்டடங்கள் திறந்து வைப்பு.

( ரவிப்ரியா )
 இலங்கையில் உள்ள ஒரேயொரு பாடசாலையான பெரியகல்லாறு வைஎம்சிஏ கமம் போக் உயர் பாடசாலையின் கட்டடத் தொகுதியும், மாணவர் விடுதியும் சம்பிரதாயபூர்வமாக 13.09.2014 ஞாயிற்றுக்கிழமை பாடசாலையின் பணிப்பளர் திருமதி ஹேமா சுதர்சனன் தலைமையில் நடைபெற்றது.


  தேசிய வைஎம்சிஏ கவுண்சில் மற்றும் நோர்வேயிலுள்ள இதே பாடசாலை ஒன்றின் அனுசரணையுடனும் அமைக்கப்பட்ட மேற்படி கட்டடத் தொகுதியை தேசிய  வைஎம்சிஏ பொருளாளர் றிச்சேட் ஜன்சியும், மாணவர் விடுதியை நோர்வே பாடசாலையின் அதிபர் யூரன் கனபஸ்;ரட்டும் திறந்து வைத்தனர்.

   அதிதிகள் சிங்கள பாரம்பரிய கலாசாரப்படி கண்டிய நடனத்தடன், அழைத்து வரப்பட்டு, தேசிய மற்றும் பாடசாலை கொடிகள் ஏற்றப்பட்டு, கண்டிய மேளம் அதிர மங்கல விளக்கேற்றப்பட்டு மண்டபத்தில் பெரியகல்லாறு மத்தியகல்லூரி மாணவர்களின் பரதமும், அம்பாரை பண்டாரநாயக்கா மகா வித்தியாலய மாணவர்களின் மயில் நடனமும், நோர்வே மாணவர்கள் எமது  பண்பாட்டிற்கமைய சேலை அணிந்து நடாத்திய இசை மற்றும் நடனமும்,  கலை விருந்தளிக்க, மொழி பேதமின்றி  அனைத்துப் பார்வையாளர்களும்  அதை விரும்பி ரசிக்க,  அதிதிகளின் உரையுடன் விழா நிறைவடைந்தது.
   முற்று முழுதாக தேசிய வைஎம்சிஏ கவுண்சிலின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழா உள்ளுர் பிரமுகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கருத்துக்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.

    நூறு வீதம் தமிழ் கலாசாரம் பின்பற்பபடும் கிராமத்தில் நடக்கும் மிகவும் பெருமைக்குரிய நிகழ்வில், வலிந்து சிங்கள கலாசார  பாரம்பரிய முறைப்படி அதிதிகளை வரவேற்றமை. எங்கும் மண்வாசனைக்கே முன்னுரிமை பேணும் மரபு மாற்றப்பட்டமை, அது இங்குள்ள மக்களைப் புண்படுத்தியமை. கலை கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை சமநிலையில் பேணும் வைஎம்சிஏ இவ்வாறு ஏன் நடந்து கொண்டது என கேள்வி எழுப்புகின்றனர்.

    வைஎம்சிஏயைப் பொறுத்தவரையில் நேர முகாமைத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனம் என பெயர் பெற்றது. நோர்வே பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந் நிகழ்வு,  குறித்த நேரத்திலும் சுமார் இரு மணித்தியாலங்கள் தாமதித்து, பிரதம அதிதி இல்லாமலே   இடம் பெற்றதும், அதன் நன்மதிப்பை பாதித்துள்ளது. இது நாட்டிற்கும் நல்லதல்ல.