மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதி தென்னை மரங்களில் “மைற்றாவின்” தாக்கம் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின்; கரையோரப் பிரதேசங்களிலுள்ள தென்னை மரங்களில் மைற்றா எனப்படும் பூச்சித் தாக்கம் அதிகரித்திருப்பதால் தேங்காய் உற்பத்தியில் கணிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் பிராந்திய அலுவலக திட்டமிடல் அதிகாரி பெருமாள் உதயசந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கதிரவெளியிலிருந்து கல்லாறு வரையிலான கரையோரப் பகுதிகளில் சுமார் ஏழாயிரம் ஏக்கர் பரப்பில் தற்போது தென்னை மரங்கள் காணப்படுகின்றன. வரட்சியான காலங்களில் இந்த மைற்றாவின் தாக்கம் அதிகரிப்பதாகவும் இதனால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

 
இத்தாக்கத்தின் காரணமாக தென்னங் குலைகளில் உள்ள குரும்பைகள் உதிர்ந்து விடுகின்றன. அதனால் தேங்காய்களின்றி வெறும் நெட்டிகளுடனேயே குலைகள் காணப்படும். வறட்சியான காலங்களில் இந்த மைற்றாவின் தாக்கம் அதிகரிப்பதாகவும் இக்காலப்பகுதியிலே இதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் தெங்குச் செய்கையாளர்கள் பாரிய இழப்பைச் சந்திக்க வேண்டிவரும் நிலை ஏற்படலாம்.

இத்தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உயிரியல் கட்டுப்பாட்டு முறையை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் சிபார்சு செய்துள்ளது.
இம்முறையினூடாக பாதிக்கப்பட்ட நான்கு மரங்களுக்கு ஒரு மரம் என்ற வீதத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு முறையை பிரயோகிப்பதன் மூலம் மைற்றா நோயை இலகுவாகக் கட்டுப்படுத்தலாம்.

அத்துடன் இம்முறையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பலதடவைகள் பாவிப்பதன் மூலம் தாக்கத்தை பலமடங்காகக் குறைக்கலாம். இந்த உயிரியல் முறையில் மைற்றாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான இரை கௌவியை உற்பத்தி செய்யும் ஆய்வுகூடங்களில் மட்டக்களப்பு தென்னைப் பயிர்ச் செய்கைச் சபை முன்னணியில் உள்ளது. இதனூடாக உற்பத்தி செய்யப்படும் இரை கௌவி பக்கெற்களை தென்னைப் பயிர்ச் செய்கைச் சபை, மட்டக்களப்பு அலுவலகத்தில் இருந்து விவசாயிகள் பெற்றுக் கொள்ள முடியும்.
இவற்றை அம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை அனுராதபுரம் போன்ற இடங்களுக்கும் மட்டக்களப்பிலிருந்து  வழங்கக் கூடியதாகவுள்ளது.

தென்னைப் பயிர்ச் செய்கைச் சபை, மட்டக்களப்பு அலுவலகத்தில் 15ரூபா பணம் செலுத்தி ஒரு இரை கௌவி பையை கொள்வனவு செய்து பாதிக்கப்பட்ட 4 தென்னை மரங்களுக்கு பாவிக்கலாம் என்றும் அவர் கூறினார்