நுண்கலைப் பேராசான் மௌனகுரு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

(Ravindramoorthy)
தேசிய இலக்கிய வளர்ச்சிக்காக சிறந்த நூல்களை வெளியிட்டு வரும் சிங்கள, தமிழ், ஆங்கில எழுத்தாளர்களை கௌரவிக்கும் முகமாக கொடகே நிறுவனம் ஒவ்வொரு வருடமும் கொடகே தேசிய சாஹித்திய விருது விழாவினை நடாத்தி வருகின்றது. 2014ஆம் ஆண்டிற்கான கொடகே
தேசிய சாஹித்திய விருது விழா எஸ். கொடகே சகோதரர்கள் ஏற்பாட்டுக்குழுவின் அனுசரணையுடன்; பேராசிரியர் வோல்டர் மாரசிங்க தலைமையில் கடந்த 4ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 3.00 மணிக்கு கொழும்பு - 07 இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பாக நடைற்றது. கலை இலக்கிய துறையில் சிங்கள-தமிழ்-ஆங்கில மொழி மூலம் பெரும் பணியாற்றிய மூத்த படைப்பாளிகள் மூவருக்கு வாழ்க்கையில் ஒரு தடவை வழங்கும் வாழ்நாள் சாதனை விருதும் இவ்விழாவில் வழங்கப்பட்டது. இவ்வருடம் கொடகே தேசிய சாஹித்திய விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர்களாக இலங்கைவாழ் மூவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். பேராசிரியர் விமல் திசாநாயக, பேராசிரியர் சி.மௌனகுரு, பேராசிரியர்.டீ.சீ.ஆர்.ஏ.குணதிலக ஆகியோரே இவ்விருதிற்கு உடமையாளர்கள் ஆவர்.



 கொடக்கே அவர்களினால் பேராசிரியர் மௌனகுரு அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. 


 கைலாகு கொடுப்பவர் பேராசிரியர் ரத்னசிறி அரங்கல, நடுவில் இருப்பவர் பேராசிரியர் வால்டர் மாறசிங்கா 

இலக்கியப் பரிசில் பெற்ற மடுல்கிரிய சோமரத்னாவுக்குபேராசிரியர் மௌனகுருவால் பரிசில் வழங்கப்படுகிறது


பேராசிரியர் சி.மௌனகுரு பற்றி அவருடைய மாணவியும், கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளருமான கிருஷ்ணவேணி கூறுகையில் 

 பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களிற்கு கிடைத்த இச்சிறப்பு விருது அவருக்கு மட்டுமல்ல தமிழ் கலை இலக்கிய உள்ளங்களிற்கும் பெருமை தான். அன்றும் இன்றும் என்றும் தன் கருத்தியலிலும், கலை இலக்கியப் நாடகப் பணியிலும் ஆழமாக வேரூன்றி அதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மட்டக்களப்பு மண்ணின் மங்காத மைந்தனாக வாழும் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தமை கலைப்பணிகளில் அவரின் தொடர்ந்தேர்ச்சியான இருப்பினை அடையாளப்படுத்துகிறது.
  ஏற்கனவே பேராசிரியருக்கு அவரின் கலைச்சேவையை பாராட்டி இலங்கை கலை கலாசார அமைச்சின் கலாசார அலுவல்கள் திணைக்களமானது கடந்த மாதங்களில்" நாடகக்கீர்த்தி" எனும் சிறப்பு விருதினை கையளித்து கௌரவப்படுத்தியமையும் இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கது. அதாவது பல கலைஇலக்கிய நூல்களையும், கட்டுரைகளையும், பல நாடகங்களையும், கூத்து மற்றும் நாடக அரங்கேற்றங்களையும், பல நாடக பயிற்சிப் பட்டறைகளையும், கலைஇலக்கிய விழாக்களையும் நடாத்தி பல இன்னோரன்ன சேவைகளை கலை இலக்கிய புலத்தில் நடைமுறைப்படுத்தியதோடு மட்டுமன்றி பாடசாலைகள், நாடகசபைகள், நடிகர்ஒன்றியம், கலைக்கழகம், கிழக்குப்பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் தற்போது அரங்க ஆய்வுகூடம் ஈறாக இன்றுவரை இயங்குதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது பேராசிரியர் அவர்களுக்கு கிடைத்த இவ் வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதிற்கான அர்த்தப்பாட்டை பறைசாற்றுகிறது என்றால் அது மிகையாகாது.

 மேலும் பேராசிரியரின் கற்பித்தல் செயற்பாடுகள், பழக்கவழக்கங்கள், நாடகவாக்க செயல்முறைகள் மிகவும் அலாதியானது. அதில் பங்குகொண்டவர்கள் அதை அறிந்திருப்பார்கள். இதன்படி இவரின் நாடகவாக்கம் கூத்துப் பாங்கானதான அடிப்படையைக் கொண்டிருப்பதால் ஆடல் முக்கியத்துவம் பெறும். ஆடல் முதன்மை பெறுவதால் அதற்கேற்ற அசைவுக்கோலங்களும் மோடிமைப்படுத்தப்பட்ட அழகியலை கொண்டிருக்கும். இவ்வாறான ஆடலின் முதன்மையினால் லயத்தோடு கூடிய சந்தச் சீர்மிகு பாடல்களும் ஆதிக்கம் சந்தச் சீர்மிகு பாடல்களும் ஆதிக்கம் செலுத்தும். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அவரது நாடகங்களில் மட்டக்களப்பு பாரம்பரிய கலையம்சங்கள் புரையோடி இருப்பதை இரசிக்கக் கூடியதாக இருக்கும். இது பேரா.சி.மௌனகுருவின் நாடகம் தான், அவருடைய நாடகப் பிரதிதான் என்பதை மிகத்துல்லியமாக படம் பிடித்துக் காட்டும்.

 இவ்வாறு தனக்கே உரியதான நாடகப்பாணியில் அவர் நாடகங்களாக செதுக்கிய சிற்பங்கள் பல. சங்காரம், மழை, சக்திபிறக்குது, நம்மைப்பிடித்த பிசாசுகள், சரிபாதி, தப்பிவந்த தாடி ஆடு, வனவாசத்தின் பின், உயிர்ப்பு, ஓர் உண்மை மனிதனின் கதை, பரபாஸ், விடிவு, கும்பகர்ணன் போன்ற பல நாடகப் பிரதிகளை எழுதியுள்ளார். இதைவிட அபசுரம், யாருக்கு சொந்தம், எங்கள் நாடு இது, புதியதொரு வீடு, அதிமானிடன், தலைவர், குருஷேத்திர உபதேசம், கரடி, லங்குருசிம்பிலிசாலா, புத்துயிர்ப்பு போன்ற நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளார்.

மேலும் கிழக்கிசை, லயம், மிருச்சகடிகம், கூத்தும் பரதமும், வானவில்லின் வர்ணங்கள், நொண்டிநாடகம் (2014) என இன்றுவரை பல நிகழ்த்துகைகளையும் மேடையேற்றி பெரும்புகழ் ஈட்டியுள்ளார். இவரது படைப்புக்களில் 'இராவணேசன்' எனும் வடமோடி நாடகமானது தன் குரு பேராசிரியர்.சு.வித்தியானந்தனூடாக தனக்கும், தன்னிலிருந்து அவரது இளம் மாணவர்களுக்கும் கடத்தப்பட்டு கொண்டும் வருகின்றது. தற்போது மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள், அரங்கு ஓர் அறிமுகம் போன்ற நூல்களை மெருகூட்டி,கனமாக்கி மீள்பதிப்பாக கொண்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 தமிழ் கலைஞர்களோடு மட்டுமன்றி சிங்கள முஸ்லிம் கலைஞர்களுடனும் ஒன்றாகச் சேர்ந்து தன் கலைஇலக்கியப் பயணத்தை நடத்திக் கொண்டு வரும் பேராசிரியர் இன்றைய இளந்தலைமுறையினருக்கு தான் படித்து அனுபவித்து உள்வாங்கிக் கொண்ட, தன் புலமையை, ஆளுமையை அவர்களுக்கு புகட்டி மட்டக்களப்பு கலைவளத்தை அழியாது பேணவும், கட்டிக்காப்பாத்தவும் பல முயற்சிகளையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு என் கடன் கலைப்பணி செய்து கிடப்பதே என்பதற்கிணங்க வாழ்ந்து, வழிகாட்டி வரும் பேராசிரியர்.சி.மௌனகுரு அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளார் விருதினை வழங்கி அவரை கௌரவப்படுத்தி, அவர் பெருமைகளை உலகறியச் செய்த, கலை இலக்கிய பற்றாளர்களின் பணி தொடரட்டும்.
என்றார்.