மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன் அவர்களினால் 40 தையல் இயந்திரங்கள் அன்பளிப்பு

கிழக்குமாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களின் 2014ம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நேற்று 40 பயனாளர்களுக்கு தையல் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டது.

கல்முனை YMCA மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் சுய தொழிலை ஏற்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதட்க்காக தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை, திருக்கோவில், ஆலையடி வேம்பு, நாவிதன்வெளி, சம்மாந்துறை, லவுகல ஆகிய பிரதேச செயலக பிரிவில் இருந்து இப்பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர். 


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ் அரசு கட்சியின் உப தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா அவர்கள் கலந்து கொண்டார்.

அங்கு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் :

அபிவிருத்தி செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு தடையாக இருக்கின்றது என்று வாய் கிழிய பேசுவோர், தங்களுக்கு கிடைக்கின்ற நிதியிலிருந்தாவது இம் மக்களுக்கு உதவி செய்து விட்டு பேச வேண்டும். வெறும் சுக போகங்களை அனுபவித்து கொண்டு கூச்சல் இடக் கூடாது. யுத்தத்தினால் பல இன்னல்களை அனுபவித்து விட்டோம். இன்றும் பழி வாங்கப் பட்டுக்கொண்டிருக்கின்றோம். என்றோ ஒரு நாள் அதர்மம் ஒழிந்து தர்மம் வெல்லும். அந்நாள் வெகு தொலைவில் இல்லை என்று உரையாற்றினார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம், கல்முனை மாநகர சபை உறுப்பினர் கமலதாசன், தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் எல்லைகாவலன் ஏகாம்பரம், சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகஸ்தர் சம்சுதீன், மாகாண சபை உறுப்பினரின் பிரத்தியேக செயலாளரும், முன்னாள் பிரதேச செயலாளருமான அழகரெத்தினம், தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் (காரைதீவு) ஜெயசிறில், ஓய்வு பெற்ற விவசாய போதனாசிரியர் சுப்பிமணியம், தமிழரசு கட்சியின் கல்முனை தொகுதி பொருளாளர் கமல நாதன், அகில இலங்கை அரசாங்க பொது உழியர் சங்க தலைவர் லோகநாதன், அம்பலத்தடி சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபை பொருளாளர் கனகராயன் உட்பட கட்சியின் உறுப்பினர்களும், பயனாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.