'சிதைக்கப்பட்ட சிறுமி' – சிறுகதை




 ( பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் பாடசாலை மாணவி ஒருவரால் ஆக்கப்பட்ட சிறுகதை இது. சர்வதேச சிறுவர் தினத்தில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக செயற்படுவதற்கான வெற்றி நியுஸின் வெளியீடு)
 விடியும் நேரம் விழித்துக் கொண்ட குயில்களின் கூட்டம் யார் முதலில் கூவுவது என்று தங்களுக்குள்ளே போட்டுக் கொள்ளும் சண்டைச் சத்தம் அந்த அழகிய சிறு குடும்பத்தை எழுப்பி விடும். கண்பார்வையிழந்த தந்தை, தாய், ஒரேயொரு மகள் இவர்கள் மூவரும் சேர்ந்ததே அந்தக் குடும்பம்.

சாலையோரம் அமைதியான நிழல் செறிந்த சூழலில் குடிசையைக் கோயிலாக நினைத்து, தங்களின் கடந்த கால துன்பங்களை மறந்து வாழ்ந்து வரும் அச்சிறு குடும்பம் உண்மையிலேயே சிறந்ததுதான். கடந்த காலத் துன்பம் என்றால் என்னவென்கிறீர்களா? வேறென்ன யுத்தந்தான், இறுதி யுத்தத்தின் கொடூரத் தாண்டவத்தில் சிக்கித் தன் இரு கண்களையும் இழந்தவரே சீனியன் எனும் அத்தந்தை.

இப்போது ஒரு வேலைக்கும் போக முடியாமல் தன் மனைவிக்கும், தன் மகளுக்கும் ஒன்றும் செய்ய முடியாத ஓர் ஆண் துணையாக அங்கும் இங்கும் தட்டித் தடவிக் கொண்டு தன் மகளின் பேச்சோசையைக் கேட்டு மனதைத் தேற்றிக் கொண்டு வாழ்கின்றார் சீனியன்.

சீனியனின் மனைவி தங்கம், அத்தெருவில் உள்ள பணக்கார வீடுகளில் வீட்டு வேலை செய்தே அந்தக் குடும்பத்தின் சீவியம் ஓடிக்கொண்டிருக்கிறது.

மகள் லட்சுமிக்கு இப்பத்தான் பத்து வயது. லட்சுமியைப் படிக்க வைக்க வேணும் என்பதில் தங்கத்திற்கு மிகுந்த அக்கறை.

சீனியன் தன்னை நினைத்து கவலைப்படும் போதெல்லாம் லட்சுமி 'ஏனப்பா அழுறீங்க எண்ட வகுப்பில நான் தான் முதலாம் பிள்ள... நான் படிச்சி ஒரு வேல எடுப்பன் தானே...! அப்ப உங்களயும் அம்மாவயும் நான் பாப்பன் தானே...! என்று கூறித் தனது மழலைப் பேச்சினால் அவனைத் தேற்றுவாள்.

காலத்தின் பாதை மிக நேர்த்தியானது என்பதனாலோ என்னவோ அது மிகவும் வேகமாக ஓடி சில மாதங்கள் கழிந்தன. அன்று ஒரு நாள் பாடசாலை விடுமுறை என்பதால் லெட்சுமியும் தாய்க்கு உதவியாக வீட்டு வேலைக்கு தாயுடன் புறப்பட்டாள்

ஓரிரண்டு வீடுகளில் தாயுடன் வேலை செய்ததில் களைத்துப் போன லெட்சுமி வீட்ட போக விரும்பினாள். 'கவனம் பிள்ள காட்டு வழியால போக்குள்ள ஓடிப் போ...' என்று தங்கம் விடை கொடுத்தாள். தாயின் முகத்தைப் பார்த்து சரியம்மா என்று முகபாவனை செய்த வண்ணம் புறப்பட்டாள் லட்சுமி எனும் அந்தச் சிறுமி அன்று நிறைய வீடுகளில் அதிகமான வேலைகள் கிடந்தன 'வேலை கிடைக்கும் போது தானே செய்யணும் நம்ம தேடுற நேரம் வேலை கிடைக்கவா போகுது' என்று மனதிற்குள் கதைத்துக் கொண்டு வேலைகளை அடுத்தடுத்த வீடுகளில் சென்று முடித்தாள் தங்கம்.

வேலைகள் முடிய நேரம் பன்னிரெண்டைத் தாண்டி விட்டது. வேலை செய்த வீடுகளில் கிடைத்த அரிசி, வாடி வதங்கிய காய் கறிகள் எல்லாம் அன்று தங்கத்தின் முந்தானை மடியை நிரப்பி விட்டன. அதிகமான நாட்களில் வெறும் முந்தானையை உதறிச் சொருகித்துப் போற தங்கத்திற்கு இண்டைக்கு மட்டும் மடி நிறைஞ்சது வியப்பாகத்தான் இருந்தது. அந்த வியப்புடன் தன் வீடு நோக்கி நடந்தாள் தங்கம்.


குடிசை வாசலில் குச்சித் தடியோட குந்தியிருந்த மனுசனாரிட்ட 'எங்க லட்சுமி...? வீட்டுக்குள்ள ஆளையே காணல்ல...' என்று கேட்டுக் கொண்டு குசினிக்குள் புகுந்து அடுக்குப் பானைகளை எடுத்துக் கொண்டிருந்தாள்.
'அவள் இன்னும் வரல்லயே... நீ தானே கூட்டித்துப் போன னீ... அவள் எங்கையும் விளையாடிக் கொண்டிருப்பாள்.' ஏன்று எழும்பி தட்டித் தட்டி குடிசைக்குள் சென்றான் சீனியன். படல வேலியின் சத்தம் சீனியனின் காதில் கேட்க 'மாடு வளவுக்குள்ள போல வெளிய பாரு' என்று கூற தங்கம் வெளிய வந்தாள் பக்கத்து வளவுக்காறி 'தங்கமக்கா நம்மட லெச்சுமிய வந்து பாரு...' என்று ஒப்பாரியுடன் கூறினாள்.

விளயாடப் போன பிள்ள எங்க விழுந்திட்டாளோ என்னவோ தெரியல்லயே என்று நினைத்து நடந்ததை அறியாது புலம்பிக் கொண்டு ஓடினாள் தங்கம்... அங்க வரும் வழியில பனங்காட்டுப் பக்கம் முள்ளு மரத்தடியில சனக்கூட்டம் அதிகமாக இருந்ததைக் கண்டாள். அவளுக்கு உச்சியில இடி விழுந்து மண்டை பிளந்தது போலாகியது. அருகே நெருங்க விடாது நடுக்கம் அவளைத் தடுத்தது. அவளக் கண்டதும் வரம்புக் கட்டு மாதிரி சனம் விலகி வழி விட்டுக் கொடுத்தது.

அங்கே பனை மட்டைகளை நெருங்கியதாகக் கிடந்த வெள்ளை நிறப் பொலித்தீனைக் கண்டதும் தன்னை மறந்து கடவுளே...என்று கத்தினாள் பொலித்தினை யாரோ விலக்கினார்கள் அதைப் பார்த்த தங்கம் விறைச்சுப் போனாள்.

அந்தக் காட்சி மிகக் கொடூரமாக இருந்தது. அப்படி ஒரு காட்சியை யாரும் பார்க்கக் கூடாது. செருப்புப் போடாம றோட்டில நடக்காத சின்னச் சிறுமி அவள் முழங்கால் வரைக்கும் மண்ணை வெட்டி கொட்டி நிரப்பி அவளது கால்கள் புதைத்து மறைக்கப்பட்டிருந்தன. அவளது அழகான வெள்ளை உடம்பில் மனித மிருகத்தின் கோரமான நகங்களால் கீறப்பட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. நமக்குள்ளேயே நடமாடித் திரியும் காம வெறியனின் கோரமான கொடுமையை பார்க்க முடியாதிருந்தது.

தனது ஒரே செல்லத்தின் தலையை தன் மடியில் தூக்கி வைத்து அவிழ்ந்து அழகான பிஞ்சு முகத்தை மறைத்துக் கிடந்த தலை முடியை கைகளால் எடுத்து முகத்தை மேலிருந்து கீழாக துடைத்து தன் மகளின் உடம்பில் புதையுண்டிருந்த குண்டூசி அளவிலான முள்ளை ஓலமிட்டு அழுதழுது பிடுங்கிக் கொண்டு வாயால் வார்த்தைகளைக் கூற முடியாதவளாய் துன்பப் பட்டுக் கொண்டிருந்தாள் தங்கம்.

தட்டித் தடவிக் கொண்டு சீனியன் வந்து சேர்ந்தான் வந்தவனுக்கு தன் மகளைப் பார்க்கவா முடியும் மகளின் அருகில் அவரை கொண்டு விட்டார்கள் மகள் மேல் தன் கைகளை வைத்தான் மகளின் குதிகால் பகுதி தேய்ந்த செருப்புத்தான் அவன் கையில் அகப்பட்டது.

'கடவுள் சீனியண்ட கண்ணப் பறிச்சது நல்லதாப் போச்சி இல்லண்டா இந்தக் காட்சிய அவன் எப்பிடித் தாங்குவான்' என்று ஒருவன் கூறிய ஒலி காதில் விழுந்தது. 'யாரப்பா எண்ட பிள்ளைக்கி இந்தக் கொடுமயச் செய்தவன் அவனுக்கு மனம் இல்லையா? கண் தெரியாதா...? ஏன்று தலையிலடித்து அழுது கொண்டேயிருந்தான்...

தங்கத்தினதும் சீனியனதும் அழுகுரலால் அங்கிருந்த எல்லோரும் அழுதார்கள் அப்போது அங்கே பொலிசார் வந்தார்கள் மனித மிருகத்தால் கொடூரமாக வேட்டையாடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட  அச்சிறுமியின் உடலை வாகனத்தில் ஏற்றினார்கள் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றார்கள்.

தனது மனக் கண்ணில் தினமும் பார்த்து வளர்த்த மகளைக் காணாது சீனியன் புலம்பிக் கொண்டிருந்தான்...தங்கம் சித்தப் பிரம்மை பிடித்தவளாக மாறிக் கொண்டிருந்தாள்.

அ.அரியசாந்தினி, 
தரம் - 13 கலைப் பிரிவு,
மட்ககுஃகறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயம்,
வாழைச்சேனை.