'கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வீரே யாமாகிற்
றங்கா வினைகளுஞ் சாருஞ் சிவநெறி
சிங்கார மான சிவனடி சேர்வீரே'
-திருமந்திரம்
சைவசமயத்தவர்களின் அடையாள சின்னமாக விளங்குகின்ற மங்களகரமான வெண்ணீறானது அக்கால அருளாளர்கள் முதல் இக்கால அடியவர்கள் வரை பற்பல அற்புதமான கைங்கரியங்களுக்கு பயன்படுத்தபட்டு வருகின்றது. இதன் மேன்மையும் மகத்துவமும் காலத்திற்குக் காலம் தோன்றி மறைந்த அருளாளர்களால் பல்வேறு செயற்கரிய செயல்களின் மூலமாக எடுத்துக் காட்டப்பட்டு வந்துள்ளது.
அதற்கமைய சைவசமயத்தின் சாரமாக விளங்குகின்ற திருமுறைகளுள் பதினோரம் திருமுறையாகிய பெரிய புராணத்தில் வையகத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் சரித்திர மேன்மையும், திருத்தொண்டின் மகிமையையும் இறைவனின் திருவருளால் சேக்கிழாரால் தொகுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனுள் விபூதி மேற் பக்;தி மிகுதியை உலகிற்கு உணர்த்திய அடியவர்களுள் ஏனாதிநாதநாயனாரும், மெய்ப்பொருள் நாயனாரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
இவர்களுள் ஏனாதிநாத நாயனார் இவ் விபூதியிலே மிகுந்த பக்தி உடையோர் விபூதியை தரித்த அடியார்களைக் காணின் அவர்களுக்கும் சிவனிற்கும் வேறுபாடின்றி அவர்களை வழிபட்டு வாழ்வியலின் ஊடாக திருவெண்ணீற்று மேன்மையையும் அதன் மூலமாக எவ்வாறு வேறுபாடற்ற சமூகத்தின் உருவாக்கத்திற்கு எடுத்துகாட்டாக வாழ்ந்திருந்தார் எனவும், அதன் ஊடாக இறைவனின் திருத்தாளினை அடைந்த முறையினையும் எடுத்து நோக்கலாம்.
சோழவள நாட்டிலே எயினனூர் எனும் ஊரிலே ஈழக்குலச் சான்றோர் குலத்திலே உத்தமராக உதித்த ஏனாதிநாத நாயனார் தொன்மைத் திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டின் நன்மைக்கண் நின்று நலம் என்றும் குன்றாதவராக வாழ்ந்து வந்தார்.
இவர் மன்னர்களுக்கு வாட்படைபயிற்றும் தொழிலில் மேம்பாடுற்றிருந்தார். வாட்படை பயிற்றுவதால் பெருகும் வளம் அனைத்தையும் சிவபிரான் அடித்தொண்டருக்கே நாள்தோறும் கொடுத்து வந்தார்.
இப்படி நிகழும் காலத்தில் ஏனாதிநாதநாயனார் தோன்றிய அதேகுடியில் தோன்றிய அதிசூரன் எனும் வாட்படைத் தொழிலாளி இருந்தான். அவர் வாட்படை தொழிலில் தன்னை விஞ்சியவர்கள் இல்லை எனும் செருக்குடன் வாழ்ந்து வந்தான். ஏனாதிநாதருக்கு பொருள் வளம் பெருக அதுகண்டு அழுக்காறு கொண்ட அதிசூரன் பகைமையாக மாற்றி தனக்கு துணையாக சிலரை அமர்திக் கொண்டான்.
வாண்மை தரும் குலத்தாய்த் தொழிலை வலியவரே பெறவேண்டும் ஆதலினால் நாம் இருவரும் போர் செய்வோம். போரில் வென்றவர்க்கே அத்தொழில் உரியது எனவே ' போருக்கு எழுக எனக் கூவி ' அழைத்தான்.
இச் செயலை 'வெட்கப் புலிகிடந்த வெம்முழையிற் சென்றழைக்கும் பைங்கட் குறு நரி' யின் சொல் போலாயிற்று என்பார் சேக்கிழார் சுவாமிகள்.
அறைகூவல் கேட்ட ஏனாதிநாத நாயனார் 'ஆர்கொல் பொர அழைத்தார் என்று அடியேறு போற் கிழர்ந்தெழுந்தார்.' இடையில் போருடை விரித்துக்கட்டி காலில் வீரக்கழல் அணிந்து வலக்கையில் வாழேந்தி இடக்கையில் கேடயந்தாங்கி போர்முனைக்கு புறப்பட்டார். அப்போது அவருடன் அவரிடத்திலே போர்த்தொழில் கற்கும் மாணாக்கர்களும் மறைப்படை வாள் சுற்றத்தாரும் ஏனாதி நாதருக்கு துணை நின்றனர்.
இருவர் படைகளும் அணிவகுத்து நின்று போர் நிகழ்ந்தது. போர்க்களத்தே இருதிறத்து வீரர்கள் பலரும் விண்ணுலகெய்தினர். மாளாது எஞ்சிநின்ற தம்படை வீரர்களை பின்னே நிறுத்தி விட்டு போர்முனையில் சினங்கொண்டு எழுந்த ஏனாதி நாதருக்கு தோற்று எஞ்சிய சில சேனைகளோடு அதிசூரன் போhக்;களத்தை விட்டு புறங்காட்டி ஓடினான்.
ஆதிசூரன் அவமானத்தால் மனம் புழுங்கி ஏனாதி நாதரை எவ்வாறு வெல்வது எனும் எண்ணமே அவனைத் துன்புறுத்தியது. ஈனமிகு வஞ்சனையால் வெல்வேன் எனத்துணிந்து விடியற்காலத்திலே 'நமக்கு உதவியாக நம் ஊரவர்களை அழைத்துக்கொள்ளாமல் நாம் இருவரும் வேறு ஓர் இடத்திலே போர் செய்வோம் வாரும்' என்று ஏனாதி நாதருக்கு தெரிவிக்கும்படி இருவரை அனுப்பினான். ஏனாதிநாத நாயனார் அதைக்கேட்டு அதற்கு உடன்பட்டு தம்முடைய சுற்றத்தவர்கள் ஒருவரும் அறியாதபடி வாளையும் பரிசையையும் எடுத்துக்கொண்டு தனியே புறப்பட்டுச் சென்றார்.
முன்பொருபொழுதும் விபூதி தரியாத அதிசூரன், விபூதி தரித்தவர்களுக்கு ஏனாதிநாத நாயனார் எவ்விடத்திலும் துன்பஞ் செய்யமாட்டார் என்பதனை அறிந்து நெற்றியிலே விபூதியைப்பூசி வாளையும் பரிசையையும் எடுத்துக்கொண்டு தான் குறித்த யுத்தக்களத்திற்குச் சென்று அங்கு நின்ற ஏனாதிநாத நாயனாரை கண்டு அவர் சமீபத்திலே போகும் வரை நெற்றியைப்பரிசையினால் மறைத்துக்கொண்டு அவருக்கு முன்னே முடுகி நடந்தான்.
'வெண்ணிறு நெற்றி விரவப் புறம்பூசி
உண்நெஞ்சில் வஞ்சகக் கறுப்பும் உடன்கொண்டு
வண்ணச் சுடர்வாள் மணிப்பலகை கைக்கொண்டு
புண்ணியப்போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான்'
ஏனாதிநாத நாயனார் அவ் அதிசூரனைக் கொல்வதற்கு சமயம் தெரிந்து கொண்டு அடியெடுத்து வைத்ததும் அதிசூரன் தன்முகத்தை மறைத்துக் கொண்டிருந்த பரிசையை புறத்திலே எடுக்க ஏனாதிநாத நாயனார் அவனது நெற்றியிலே தரிக்கப்பட்ட விபூதியைக் கண்டார்.
'கண்டபொழு தேகெட்டேன் முன்பிவர்மேற் காணாத
வெண்டிருநீற் நின்பொலிவு மேற்கண்டேன் வேறினிஎன்
அண்டர்பிரான் சீரடியார் ஆயினார் என்றுமனங்
கொண்(டு)இவர்தங் கொள்கைக் குறிவழிநிற் பேன்என்று'
கண்டபொழுதே 'ஆ கெட்டேன்!' முன்பொரு பொழுதும் இவர் மேற்காணாத திருவெண்ணீற்றின் பொலிவு கண்டேன். இனி வேறென்ன ஆலோசனை 'அண்டர்பிரான் சீரடியார் ஆயினார்!' இனி இவரது உள்ளகக் குறிப்பின் வழியே நிற்பேன்.' என்று திருவுள்ளத்திலே நினைந்து கைவாளையும் பரிசையையும் கீழே போட முடிவுசெய்த அவர் சிறிது நேரம் கழித்து யான் படைக்கலத்தை கீழே போட்டு விடுவேனாகில் 'நிராயுதராம் ஏனாதிநாதரைக் கொன்றான் அதிசூரன்' என்ற பழியல்லோ இவருக்கு வந்தெய்தும். என்னால் இவருக்கு வரலெய்தலாகாது. என்று எண்ணி அவருக்கு முன் வாழோடு போர் செய்வது போல் நிற்க பாதனாகிய அதிசூரன் அவரைக்கொன்று தான் எண்ணிய கருத்தை நிறைவேற்றிக்கொண்டான்.
இதனைச் சேக்கிழார் 'அந் நின்ற தொண்டர் திருவுள்ளம் ஆரறிவார்' முன்னின்ற பாதகராம் தன் கருத்தே முற்றுவித்தார் என்பார். அப்பொழுது சிவபெருமான் அவர்முன் எழுந்தருளி பகைவர் விளையாமல் உலகத் தொடர்பை அறுத்துக் கொண்ட ஏனாதிநாத நாயனாருக்கு தம்மைவிட்டு பிரியாத பேரின்ப வாழ்வை அளித்தருளினார்.
இவ்வாறு சிவனருளாலே தன்பணியைச் சிவபணியாக கருதி வாழ்ந்து விபூதி மேற் பக்;தி மிகுதியை உலகிற்கு உணர்த்திய உத்தமரான ஏனாதிநாத நாயனாரின் குருபூசை புரட்டாதி உத்தராட நாளன்;று அவரை நினைவு கூர்ந்து மட்டக்களப்புஇ அம்பாறை பகுதிகளில் அவரது வம்சாவழியினராகிய சான்றோர் குலத்தவர்களால் தற்காலத்தில் சிறப்பாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
ஆகையினால் இவ் அடியவர்களின் பரந்த நோக்குடனான சமூகமயப்பட்ட சிந்தனைகளையும் செயல்விளைவுகளையும் கற்றறிந்து தமிழோடு சைவ அடையாளங்களை பேணிபாதுகாத்து சைவ ஒழுக்க சீலர்களாக வாழ்வதற்கு வழிகாட்டிகளாக திகழ்வதன் மூலம், தற்கால சமூகத்தினையும் எதிர்கால சந்ததியினரையும் சிறந்த சைவ சமயிகளாக உருவாக்கி பற்றற்ற பரம்பொருளாகிய பரமசிவனின் பாதக்கமலங்களை அணுகி மனிதப்பிறவியின் பயனை அடைந்து கொள்ள முடியும்.
'ஈழக்குல சான்றோர் எயினனூர் வாழ்
ஏனாதி நாதனார் இறைவன் நீற்றைத்
தாழத் தொழுமரபார் படைகளாற்றும்
தன்மைபெற அதிசூரன் சமரில் தோற்று
வாழத் திருநீறு சாத்தக்கண்டு மருண்டார்
தெருண்டார் கைவாள் விடார் நேர்
வீழக்கழிப்பார் போல் நின்ற யாக்கை
விடுவித்து சிவனருளே மேவினாரே'
-திருத்தொண்டர் புராண சாரம்-
சைவவித்தகர் வெற்றிவேல் சசிகரன்
வந்தாறுமூலை















