ஏனைய இனங்களின் மனதை புண்படுத்தாத வகையில் கடமைகளை புரிய வேண்டும் - கிழக்குமாகாண அமைச்சர் நசீர் அஹமட்

(சக்தி) இலங்கைமக்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சகலரும் சமத்துவமாக வாழும் நிலை ஒன்று நமது நாட்டில் உருவாக வேண்டுமென இந்த ஹஜ் பெருநாளில் அனைவரும் பிரார்த்திக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், கிழக்குமாகாண அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் தெரிவித்தார்.

 புனித ஹஜ் பெருநாளையொட்டிஅவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது….

 சுனாமியாலும் யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி சின்னா பின்னமாக்கப்பட்டும் சிதைந்து கிடக்கும் கிழக்குமாகாணத்தை மீளக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் கொடுக்கும் வகையிலே கிழக்குமாகாணத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து அதனை செயற்படுத்தி வருகின்றோம். இந்த மாகாணத்தை பொருளாதாரத்தில் மேம்பட்ட வலயமாக உருவாக்க நாம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அனைவரும் இதய சுத்தியுடன் ஒத்துழைப்பதோடு அதுவெற்றிபெற இந்த நந்நாளில் பிரார்த்திக்க வேண்டுமென உருக்கமாக வேண்டிநிற்கின்றேன். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் விவசாய, மீன்பிடி, கால்நடை உற்பத்திகளை மேலும் பெருக்கி பொருளாதாரத்தில் தன்னிறைவை அடையநாம் கொண்டுள்ள திட்டங்களுக்கும் மனமார உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.

 இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறுதியாகங்களை ஒட்டுமொத்தமாக தொட்டுணர்த்தும் சம்பவத்தை நினைவு கூர்வதே புனித ஹஜ் ஒன்று கூடலாகும்.

 இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தையும் பேணவேண்டுமென வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம். முஸ்லிம்களாகியநாம் நமது மார்க்கத்தின் அடிப்படையில் வாழக் கற்றுக் கொள்வது இன்றியமையாதது.  இன்று உலக முஸ்லிம்கள் பணக்காரன், ஏழை என்றபேதமின்றி கறுப்பன், வெள்ளையன் என்ற நிறவேறுபாடுகளின்றி ஆண்டான் அடிமை என்ற வித்தியாசமின்றிபுனித கஃபாவில் ஒன்று கூடி தம்மை படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி கொண்டிருக்கின்றனர். நபிஇப்றாஹிம், நபிஇஸ்மாயில், அன்னை ஹாஜராவின் அளப்பரிய தியாகத்தை நினைந்து மனமுருகிக் கொண்டிருக்கின்றனர். அதே போன்று நாமும் அந்த நிகழ்வுகளை நினைந்து அல்லாஹ்வுக்கு அஞ்சி இறைபிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.



இன்று உலகளாவிய முஸ்லிம் உம்மாக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும், சவால்களுக்கும், முகம் கொடுத்து வருகின்றனர். அந்தசவால்களை முறியடிக்கும் வகையில் நாம் இறைவனிடம் அழுது தொழுது எமக்கு உரியதீர்வு கிடைக்க பிரார்த்திக்க வேண்டும்.



பல்லின மக்கள் வாழும் இலங்கையில் முஸ்லிம்களாகிய நாமும் ஏனைய இனங்களின் மனதை புண்படுத்தாத வகையில் கடமைகளை புரிய வேண்டும், அடுத்தவர்களுக்கு இடைஞ்சலாக நாம் இல்லாது இந்த பெருநாளை சிறப்பான முறையில் கொண்டாடுமாறு நான் உருக்கமாக வேண்டுகிறேன். என குறிப்பிடப் பட்டுள்ளது.