பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை வழங்க முன்வருமாறு அழைப்பு – கி.மா. முதலமைச்சர்

(சித்தாண்டி நித்தி) பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தனது அனுதாபத்தையும் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துள்ளார்.

மண் சரிவினால் உயிர்களையும்  உடைமைகளையும் இழந்துள்ள மற்றும் காயமடைந்துள்ள குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண மக்கள் சார்பில் கவலையை வெளியிடுவதாக இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் மீரியபெத்தை பகுதியில் திடீரென ஏற்பட்ட மண் சரிவு அனர்த்தம் அப்பகுதி மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. பல நூற்றாண்டு காலம் எமது தாயகத்திற்கு அர்ப்பணிப்புச் செய்து வாழுகின்ற இந்த மக்கள் தற்போதைய அரசாட்சி காலத்தில் முன்னேற்றத்தைக்கண்டுவரும் நிலையில் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றம்  பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியள்ளது. எனினும் அரசாங்கத்தின் முயற்சியினால் முன்னெடுக்கப்படும் துரித மீட்புப் பணிகளும்  நிவாரண நடவடிக்கைகளும் வெற்றியளிக்கவேண்டுமென பிரார்த்திக்கின்றேன். அத்துடன் இந்த மக்கள் சீக்கிரமாக மீண்டெழுந்து சுமுகமாகவும் நிம்மதியாகவும்  வாழவேண்டுமென இறையை வேண்டுகிறேன்.

இதேவேளை  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தேவையான உதவி ஒத்தாசைகளை மனிதாபிமான அடிப்படையில் வழங்க கிழக்கு மாகாணத்திலுள்ள தன்னார்வ தொண்டர் நிறுவனங்கள் பொதுநல அமைப்புக்கள் மற்றும் பொது   மக்களும் உடனடியாக  முன்வரவேண்டுமென முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.