வவுணதீவு பொலீசாரின் ஏற்பாட்டில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பான கூட்டம்

(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு வவுணதீவில் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் வவுணதீவு பொலீஸ் பொறுப்பதிகாரி நிலங்க பெர்னாண்டு தலைமையில் மண்முனை மேற்று பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது வவுணதீவு பொலீஸ் பிரிவுக்குட்பட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

டெங்கு நுளம்புகள் பரவாவண்ணம் அலுவலக சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளல் பற்றியும், இதில் பொதுமக்களைப்போல் அரச உத்தியோகத்தர்களுக்கும் பொறுப்புக்கள் உள்ளது, என்பது பற்றியும் பொலீஸ் பொறுப்பதிகாரியினால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அவர் கூறுகையில், டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு ஏற்றவாறு அல்லது டெங்கு நுளம்புகள் பரவிக் காணப்படும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் பொது சுகாதாரப் பரிசோதகர்களைப்போல் பொலீசாரினாலும் சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.

எமது பிரதேசத்தில் டெங்கு பரவாவண்ணம் நாம் அனைவரும் சூழலை பாதுகாத்து வருகின்றோம், இது எதிர்காலத்திலும் பராமரிக்கப்பட்டு சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளவேன்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
என கூறினார்.

இதன்போது பொதுச் சுகாதார பரிசோதக மேற்பார்வை உத்தியோகத்தர் விமலசேகரம் அவர்களால் டெங்கு கட்டுப்பாடு பற்றிய உரையும் இடம்பெற்றது.