வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பேத்தாழை பொதுநூலகத்தில் நடைபெற்ற புத்தகக் காட்சியும் மாஸ்டர் சிவலிங்கத்தின் கதைகூறல் நிகழ்வும்

(சதீஸ்)
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பேத்தாழை பொதுநூலகத்தில் புத்தகக் காட்சியும் மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் கதை கூறும் நிகழ்வும் கடந்த24ம் திகதி இடம்பெற்றது. 

நூலகர் தி.சரவணபவான் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெ.தினேஸ், கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜனாப் எஸ்.எம்.சிஹாப்தீன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகநேசன், வாழைச்சேனை தமிழ் கலை, இலக்கிய மன்றத்தின் தலைவர் வ.சின்னத்தம்பி ஆகியோர்  அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

நூலகத்தின் வாசகர் வட்டம், வாழைச்சேனை தமிழ் கலை, இலக்கிய மன்றம், பிறிமா நிறுவனம் ஆகியோரின் ஆதரவுடன் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
பிரதேச செயலாளர் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களோடு ஆசிரியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதேச செயலாளர் அவர்கள் 'பேத்தாழை பொதுநூலகமானது கோறளைப்பற்று பிரதேசத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும், மட்டக்களப்பு பொதுநூலகத்திற்கு அடுத்தபடியாக பல அரிய நூல்களை தான் இங்கே தான் கண்டு மகிழ்வுற்றதாகவும், மாணவர்களும் பொது மக்களும் இந்நூலகத்தினை தொடர்ந்து பயன்படுத்தி தங்கள் அறிவினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக மாஸ்டர் சிவலிங்கம் அவர்களை இவ்வாசிப்பு மாத நிகழ்வில் கலந்து கொள்ளச் செய்வது மிகவும் சிறப்பான விடயம் எனவும் தனது மகிழ்ச்சியினை தெரிவித்துக் கொண்டார்.
 அதனைத் தொடர்ந்து மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் கதைகூறல் நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வின் முடிவில் வாழைச்சேனை தமிழ் - கலை, இலக்கிய மன்றத்தினர் 'மாஸ்டர் சிவலிங்கம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, வாழ்த்துப் பா பாடி கௌரவித்தனர்.

புத்தகக் காட்சிக்கு வருகை தந்திருந்த மாணவர்களுள் நூலகத்தின் அங்கத்துவரான வாழைச்சேனை இந்துக்கல்லூரியைச் சேர்ந்த செல்வி.ஜெ.அம்றிதா எனும் மாணவி தனது குடும்பத்தினருடன் இணைந்து நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்புச் செய்தார்.

தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வுகளுக்கு பிறிமா நிறுவனத்தினர், ஹற்றன் நசனல் வங்கி மற்றும் கொமர்சல் வங்கி போன்றன இணை அனுசரணை வழங்கிச் சிறப்பித்தனர்.