களுவன்கேணி பிரதான வீதியை புணரமைத்து தருமாறு வேண்டுகோள்விடுத்து மக்கள் கவனயீர்ப்பு பேரணி

(சித்தாண்டி நித்தி) ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட,  களுவன்கேணி பிரதான வீதியை புணரமைத்து தருமாறுவேண்டுகோள் விடுத்து இன்று (3) வெள்ளிக்கிழமை மக்கள் கவனயீர்ப்பு பேரணியொன்றை நடாத்தியிருந்தனர்.

களுவன்கேணி பிரதான வீதி நீண்ட காலமாக புணரமைக்கப்படாமல் இருப்பதினால், போக்குவரத்து செய்யவதில்,  மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகிய நிலையில் தமது வீதியை புணரமைக்க பல்வேறு தரப்பினரிடமும் இதுவரை கோரிக்கை விடுத்தும் தமது கோரிக்கை நிறைவேறாத நிலையில் இவ் கவனயீர்;ப்பு பேரணியை ஒழுங்குபடுத்தி வீதிக்கு இறங்கவேண்டிய நிலை உருவாகியதாக களுவன்கேணி கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

களுவன்கேணி பிரதான வீதியினூடாக பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும்  மீன் வியாபாரிகள் என போக்குவரத்து செய்வது இப்பாதையினூடகவே நடைபெறுவது வழமை. 

கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தைக்கொண்ட இவ் பிரதான வீதி பல காலமாக குன்றும் குழியுமாக இருந்து வந்த வேளையில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய சிவநேசத்துரை சந்திரகாந்தன் வீதியை புணரமைத்து தருவதாக வாக்குறுதி கொடுத்த நிலையில் முதல் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் இதுவரைக்கும் எவ்வித முன்னேற்றமும் இல்லையென மக்கள் தெரிவிக்கின்றனர். 

மக்களின் கனயீர்ப்பு பேரணியை அறிந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், மீள்குடியோற்ற பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் ஆகியோர் அவ்விடத்துக்கு வருகைதந்து மக்களின் கோரிக்ககைளை ஏற்றுக்கொண்டதுடன் 'விரைவில் களுவன்கேணி வீதியை புணரமைத்து தருவதற்கு தாம் ஏற்பாடு செய்வதாக' மக்களின் மத்தியில் வாக்குறுதி கொடுத்ததையடுத்து பேரணியில் ஈடுபட்ட மக்கள் கலைந்துசென்றனர்.  

இவ் கவனயீர்ப்பு பேரணியில் களுவன்கேணி மீன்பிடிச் சங்கம், மாதர் சங்கம், போக்குவரத்துக்கு சங்கம், ஆலயங்களின் நிருவாகங்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். பாதுகாப்பு கடமைக்காக ஏறாவூர் பொலிசாரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.