கண்ணகி கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு நிவாரணங்கள் வழங்கிவைப்பு

(UK, Batti)

ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் கடந்தகாலங்களில் நிலவிய கடுமையான வறட்சியினால் பாதிக்கப்பட்டுத் தமது வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் உலக உணவுத் திட்டத்தின் அனுசரணையோடு உலர் உணவுப் பாதுகாப்பு நிவாரணம் வழங்கும் நிகழ்வு இன்று (29) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடந்த கோடைகாலத்தில் தொடர்ந்து நிலவிய கடுமையான வறட்சியால் முழுமையாகப் பாதிக்கப்பட்டு நீராதாரங்கள் வற்றிய நிலையில் தமது வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்ட கண்ணகி கிராமம் முதலாம் வட்டாரத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும், திவிநெகும அபிவிருத்தித் திணைக்கள (சமுர்த்தி) உதவி பெறுகின்ற 150 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 460 பேருக்கு அரிசி, பருப்பு மற்றும் தேங்காய் எண்ணை போன்ற உலருணவுப் பொருட்கள் நிவாரணங்களாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த குறித்த நிவாரணங்கள் வழங்கும் நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ரி.கிருபைராஜா, கணக்காளர் கே.கேசகன், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, குறித்த கிராமத்திற்கான கிராம உத்தியோகத்தர் பி.பத்மநாதன், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.கோபாலசிங்கம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.சுபாகரன், ஆலையடிவேம்பு பிரதேச இடர் முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.தனராஜன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.