சுவிஸ் உதயம் அமைப்பின் உதவிகள் வழங்கம் நிகழ்வு

(எம்.ஏ.றமீஸ்)
சுவிஸ் உதயம் அமைப்பின் மூலம் உதவிகள் வழங்கக் கோரி விண்ணப்பம் செய்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  வருமானம் குறைந்த குடுப்பங்கங்களை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கலந்துரையாடலும் உதவிகள் வழங்கம் நிகழ்வும் சனிக்கிழமை மட்டக்களப்பு லங்கா ரெஸ்டில் இடம்பெற்றது.

கிழக்கு உதயம் அமைப்பின் தலைவரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எம்.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் பிரபல சமூக சேவையாளருமான கே.துரைநாயகம் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்ட இந்நிகழ்வின்போது கிழக்கு உதயம் அமைப்பின் செயலாளரும் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான பி.பாலச்சந்திரன், அமைப்பின் உப தலைவரும் ஓய்வு நிலை அதிபருமான கலாபூஷணம் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றனர்.
சுவிஸ் உதயம் அமைப்பின்  அனுசரணையில் அதன் கிளை நிறுவனமான கிழக்கு உதயத்தினால் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் உதவி வழங்கும் செயற் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்த சுமார் ஐம்பதிற்கும் அதிகமான வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக் கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட குடும்பத்தலைவர்களும் இதன்போது கலந்து கொண்டனர்.
இதன்போது வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் விபரங்கள் அறியப்பட்டு அக்குடும்பங்களின் மாணவர்கள் மற்றும் குடும்ப தலைவர்களுக்கு வாழ்வாதார உதவிகளும் கற்றலுக்கான உதவிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் பிரபல சமூக சேவையாளருமான கே.துரைநாயகம் குறிப்பிடுகையில், நமது சமூகம் கடந்த கால அனர்த்தங்களின் போதும், அசாதாரண சூழ்நிலையின் போதும் பல்வேறான இழப்புக்களைச் சந்தித்துள்ளது. இவ்வாறாக நாம் சந்தித்த இழப்புக்களை ஈடு செய்யக்கூடியதாக எம்மிடம் இருக்கும் ஒரே ஒரு சொத்து கல்விச் செல்வமே ஆகும். இக் கல்வியினை தடையின்றிக் கற்பதற்கு சுவிஸ் உதயம் அமைப்பு பல்வேறான உதவிகளைப் புரிந்து வருகின்றது.

புலம் பெயர்ந்து வாழும் மக்கள் எமது மக்களுக்காக வழங்கி வரும் நன்மைகளை நாம் சரிவர பயன்படுத்தி உச்ச பயனை அடைந்து கொள்ள வேண்டும். அவர்கள் செய்கின்ற உதவிகளை நாம் என்றும் மறந்து விடக் கூடாது. இலவசமாக கிடைப்பவற்றை சிலர் அலட்சியமாகப் பார்க்கின்றார்கள். அவ்வாறில்லாமல் எமக்குக் கிடைப்பவற்றை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர முயற்சிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் கல்வியில் உயர்ச்சி பெற்றிருந்த நாம் அசாதார சூழலால் கல்வியில் பின்தள்ளப்பட்டுள்ளோம். எமது இருப்பை உறுதிப்படுத்தவும் வாழ்வில் உயர்ந்து வெற்றி நடை போடவும் எமது இளம் சந்ததியினர் முனைப்புடன் செயற்பட்டு கல்வியில் மூலம் உயர் ஸ்தானத்தை அடைய வேண்டும். குறைந்த வருமானத்தை நம்பி வாழும்; எமது மக்கள் தமது பிள்ளைகளின் கல்விக்காக செலவிட முடியாமல் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இடை நடுவே முடித்து விடுகின்றனர்.

எமது சுவிஸ் உதயம் அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைவரதும் ஒற்றுமையுடனான செயற்பாட்டின் மூலம் கடந்த பத்து வருடங்களாக நமது மக்களுக்காக உதவிகள் பலவற்றைச் செய்ய முடிகின்றது. எமது சுவிஸ் உதயம்  அமைப்பின் தலைவர் டி.எல்.சுதர்சன் மற்றும் செயலாளர் வே.ஜெயக்குமார் ஆகியோர் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.