கிழக்கு மற்றும் றுகுண பல்கலைக்கழகங்களுக்கிடையில் விவசாய கல்விசார் புரிந்துணர்வு ஒப்பந்த கைசாத்து

(சித்தாண்டி நித்தி) உயர் கல்வியில் பரஸ்பர நன்மைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்து நிகழ்வு  கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் றுகுண பல்கலைக்கழகத்திற்கும் இடையில் கடந்த ஒக்டோபர் 4ம் திகதி (சனிக்கிழமை) றுகுண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 

இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கிழக்குப் பல்கலைக்கழகம் சார்பாக பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா மற்றும் றுகுண பல்கலைக்கழகம் சார்பாக உபவேந்தரும் சிரேஸ்ட பேராசிரியருமான எஸ்.ஜி.ஜே.என். சேனநாயக்க அவர்களும் கைச்சாத்திட்டனர்.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பொ சிவராஜா மற்றும் றுகுண பல்கலைக்கழகம் சார்பாக விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ் சுபசிங்க அவர்களும் சாட்சிகளாக கையொப்பமிட்டனர். 

இவ் உடன்படிக்கையின் முக்கிய நோக்கங்களாக எதிர்காலத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களின் விவசாய பீடங்களுக்கிடையில் கல்விசார் நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிகளை மேம்படுத்துவது மட்டுமின்றி மாணவர்கள் பரிமாற்றல் மற்றும் பட்டப் பின் படிப்பு போன்றவற்றுக்கும்  வழிவகுப்பதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.