கல்முனை மக்களின் நிவாரண உதவி மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைந்தது.

கிழக்கிலிருந்து குறிப்பாக கல்முனையிலிருந்து நாம் இங்கு வந்தது எந்த அரசியல் இலாப நோக்கம் கருதியும் அல்ல. எமது தமிழின இரத்த உறவுகள் துன்பப்படும் போது மனிதாபிமான ரீதியில் எம்மாலியன்ற உதவியை வழங்க வேண்டும் என்ற நல்ல சிந்தனையின் அடிப்படையிலேயே இவ்வுதவியை வழங்குகின்றோம். இதற்காக உங்களிடமிருந்து எந்த ஒரு பிரதியுபகாரத்தையும் நாம் எதிர்பார்க்கப் போவதில்லை.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம். இராஜேஸ்வரன் கொஸ்லந்தை ஏதிலிகள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கொஸ்லந்தை விவகாரத்தையோ அல்லது உங்களையோ நாம் அரசியல் களமாக ஒரு போதும் பயன்படுத்தப் போவதில்லை. அப்படியொரு தேவையும் தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கில்லை.

இலங்கையில் எந்த திசையிலிருந்தாலும் தமிழர்கள் என்ற ரீதியில் நாம் ஒன்றுபட்டு வாழ வேண்டும். ஒற்றுமையாக செயற்பட வேண்டும். பிரிந்து செயற்படுவதால் மற்றவருக்கே நன்மை.

நாம் ஒற்றுமையாக வாழ்ந்தால் மட்டுமே எமக்கான உரிமைகளையோ சலுகைகளையோ அபிவிருத்திகளையோ பெற்றுக் கொள்ள முடியும் என்று மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் நேற்று கொஸ்லந்தை ஏதிலிகள் தங்கியுள்ள பண்டாரவளை ஜஸ்பேபி தமிழ் மகா வித்தியாலயத்திற்குச் சென்று அங்குள்ள 44 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் மேலும் கொஸ்லந்தையிலுள்ள ஒதிய உடவெறிய நியூபேர்க் ஆகிய 03 இடங்களிலுள்ள தமிழ் வித்தியாலயங்களிலும் தன்கும்பர வைத்தியசாலையிலும் தங்கியுள்ள 87 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்:
உங்களின் துயரங்களில் நாம் பங்கெடுக்கின்றோம். எமது பகுதியில் யுத்தம் சுனாமி ஏற்பட்டவேளையில் தமிழர் என்ற ரீதியில் நீங்கள் மனதளவிலாவது பிரார்த்தனை செய்திருப்பீர்கள். வேதனைப்பட்டிருப்பீர்கள்.

அந்த மானசீக உறவே எம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்தது. எமக்கு உங்களை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் கடுகளவும் இல்லை. அதற்கு எந்த தேவையுமில்லை. நான் இங்கு அரசியல்வாதியாக வரவில்லை.

ஒரு சராசரி மனிதனாகவே வந்துள்ளேன். நீங்கள் இங்கிருந்து சென்று நல்ல நிலையில் வாழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

இவ்வேளையில் கல்முனையில் எமக்குதவிய பொது அமைப்புகள் விளையாட்டுக் கழகங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றிகள். என்றார்.