இன்று மாலை புனித இக்னேசியஸ் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 1:0 எனும் பேறினால் வெற்றி பெற்று யங்ஸ்டார் அணி முதலிடம் பெற்றுக் கொண்டது. இவ்வாண்டில் இதுவரை நடத்தப்பட்டுள்ள பத்து செவண சைட் போட்டிகளில் சீலாமுனை யங்ஸ்டார் நான்காவது தடவையாக முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாமிடத்தை புனித இக்னேசியஸ் அணியும், மூன்றாமிடத்தை டிஸ்கோ அணியும் நான்காமிடத்தை மைக்கல் மென் அணியும் பெற்றுக் கொண்டது. இச்சுற்றுப் போட்டியில் சிறந்த வீரருக்கான பரிசினை யங்ஸ்டார் வீரர் நா.சுதன் அவர்களும், சிறந்த கோல் காப்பாளராக புனித இக்னேசியஸ் அணியின் கோல் காப்பாளரான ஜோசப் ஜெயந் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.
இன்றைய பரிசளிப்பு விழாவிற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய உறுப்பினரும், கிழக்கு மாகாண விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகருமான திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாகவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் திரு.பூ.பிரசாந்தன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.வே.ஈஸ்பரன், கால்பந்தாட்டச் சங்க இடைக்கால நிருவாகத்தின் தலைவர் திரு.எஸ்.உதயராஜ், புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பிரதம பூசகர் திரு.அ.மனோகரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், மண்முனை வடக்கு விளையாட்டு உத்தியோகத்தர் திரு.பி.ரூபராஜ், தேசிய மட்டத்தில் சம்பியனாக வெற்றி பெற்ற கபடி அணியின் தலைவர் திரு.து.மதன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் வருகை தந்திருந்தனர்.
இதில் சிலாமுனை யங்ஸ்டார் கழகத்தின் வருடாந்தச் செய்தி மடலான 'இளந்தாரகை' வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் விசேட நிகழ்ச்சியாக மட்டக்களப்பின் முன்னாள் கால்பந்தாட்ட வீரராகவும், கால் பந்தாட்ட நடுவராகவும் விளங்கி புனித இக்னேசியஸ் அணியினை வழிப்படுத்திய மதிப்பிற்குரிய மூத்த வீரர் திரு விறிற்றோ கென்றிக் அவர்களுக்கு அவருடைய கால் பந்தாட்டப் பணிக்காக பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு நடத்தப்பட்டது.
அத்துடன் யங்ஸ்டார் அணியின் மூத்த வீரர்களான எஸ்.வின்சன், எஸ்.ஜெயக்குமார் ஆகியோரும் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற கபடி வீரர் து.மதன் அவர்களுக்கும் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
இதில் மட்டக்களப்பின் பல்வேறு துறைகளினதும் வளர்ச்சிக்காக திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் ஆற்றிய, ஆற்றிக் கொண்டிருக்கின்ற பணிகளைக் கௌரவிக்கும் வகையில் யங்ஸ்டார் கழகத்தினால் பொன்னனாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.












