கிழக்கு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி அமைச்சரினால் மாணவர் விடுதிக்கான கட்டடத் தொகுதிகள் திறந்துவைப்பு

(சித்தாண்டி நித்தி) கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் விடுதிக்கான இரண்டு கட்டடங்களை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று (9) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் வந்தாறுமூலை மாணவர் விடுதி வளாகத்துக்குள் நடைபெற்றது.

நடைபெற்ற கட்டட திறப்பு விழாவுக்கு உயர்கல்வி அமைச்சர் எஸ்.வி.டிசாநாயக்கா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கான விடுதி கட்டடங்களை சுபவேளையில் நாடாவெட்டி திறந்துவைத்ததுடன் புதிதாக அமைக்கப்பட்ட விடுதி வளாகத்துக்குள் மர  நடுகையும் இடம்பெற்றது.

நடைபெற்ற நிகழ்வில் தலைமையுரையாற்றிய கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா கருத்துதெரிவிக்கையில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கிவரும் அதி உத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷா அவர்களுக்கும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.வி டிசாநாயக்கா அவர்களுக்கும்  நன்றிகளைத் தெரிவிப்பதோடு தொடர்ந்தும் இதுபோன்ற உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். 

மாணவர்களுக்கான இரண்டு கட்டங்களையும் திறந்துவைத்து அமைச்சர் உரையாற்றும்போது தெரிவித்ததாவது, 

கிழக்கு பல்கலைக்கழகம் கடந்த மூன்று வருடத்துக்குள் பாரிய மாற்றத்தை அபிவிருத்தி துறையிலும் சரி ஏனைய பல்கலைக்கழகம் சார்ந்த துறையிலும் சரி பாரிய மாற்றத்தைக் கண்டுள்ளதுடன் கிழக்கு பல்கலைக்கழகம் உலக தரத்தில் அதன் வளர்ச்சிப்படி முன்னேறியுள்ளது இவ்வாறான அபிவிருத்தியைக்கொண்டு வந்தமைக்கு நான் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா அவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் இவ்வாறான வளர்ச்சிக்கு பாடுபட்ட சகல ஆசிரியாகள்; மற்றும் ஊழியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும்  இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் இரண்டு வருடத்திற்குள் பொறியியல் துறையை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வருவேன் எனவும்  குறிப்பிட்டார்.