மட்டக்களப்பின் அழகுக்கும், பாதுகாப்புக்கும் அங்கு காணப்படுகின்ற இயற்கை அரண்களே காரணம். அந்தவகையில் ஆறு, குளம், கடல், மணல், புற்தரை, உப்பேரிகள், வயல்கள் மற்றும் பற்றைக்காடுகள் என பல இயற்கை வளங்களைக் கொண்ட அழகான ஊர் தேத்தாத்தீவு என்றால் அது மிகையில்லை. இருந்தாலும் மனித பெருக்கத்தினாலும், மனித அத்துமீறல்களினாலும் இவையெல்லாம் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிவிட்டது'. இயற்கையை அழிக்கும் ஆர்வலர்கள் அதிகரித்து அதை ஆதரிக்கும் ஆர்வலர்கள் குறைவடைந்து விட்டனர்.
கட்டுக்கடங்காத இயற்கை அழிப்புகளால் இன்று இந்த ஊர் இயற்கை சமநிலை அற்றும், கேட்பார் பார்ப்பார் இல்லாத நிலையில் இருக்கின்ற ஒரு சந்தர்ப்பம் தோன்றியுள்ளது. இருப்பினும் அவற்றை பாதுகாத்தல் மற்றும் மீளுருவாக்கல், அவற்றை ஊக்குவித்தல் என்பனபோன்ற நல்ல காரியங்களில் ஈடுபடுகின்றவர்கள் ஒரு சிலரே!
இந்த ஊரில் மேற்கு கோடியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் 'குடியிருப்பு' என அழைக்கப்படுகின்றது. அருகே வயல், ஆறு, மேட்டு நிலப்பயிர்ச்செய்கை அது போல் பாடசாலை போன்ற இன்னோரன்ன விடயங்களுக்கும் இந்த ஊருக்கு போடப்பட்டிருக்கும் வீதி பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதனால் இதுவரை காலமும் அதிகமானோர் கால்நடையாகவே பயணம் செய்து வரும் ஒரு அவல நிலை இருக்கிறது.இவர்கள் அனைவரும் சுடுகுது மடியைப்பிடி என்கின்ற நிலையில்தான் இதனால் பயணம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு அறுதலாக இருந்து போக அந்த வழியில் ஒரு மரம் கூட இருக்கவில்லை.
இந்த தேவையை உணர்ந்த ஊர் மக்கள் உதயம் விளையாட்டுக்கழகத்தை நாடியபோது, அவர்களிடம் இந்த சாலை மரநடுகையை தொடங்குவதற்கான தொண்டர் பலம் தவிர்ந்த எந்த வசதியும் இல்லாமல் இருந்த சந்தர்ப்பத்தில், இந்த ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அதனை நேசிப்பவருமாகிய கனடாவில் வசித்துவரும் திரு.பா.கமலநாதனுடன் நாடியதும் உடனடியாக இந்த நல்ல பணியை தொடங்க உதவ முன்வந்தார்.
இவர் இந்த திட்டத்துக்கு மாத்திரமல்ல இன்னும் பல முன்னேற்றகரமான வேலைகளை நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு உதவியளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைக்க அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த பட்டிருப்பு தொகுதி சிறிலங்காத் சுதந்திரக் கட்சி அமைப்பாளர் திரு.சாணக்கியன் அவர்களும், களுவாஞ்சி குடி ஆதார வைத்தியசாலை உயரதிகாரியும் வைத்தியக் கலாநிதியுமாகிய Dr.G.சுகுணன் அவர்களும் இதில் கலந்து சிறப்பித்ததுடன் திரு கமலநாதன் அவர்களையும் பாராட்டியதுடன், மரங்களையும் நட்டு இந்த நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் கழக உறுப்பினர்கள், ஊர் தொண்டர்கள் இந்த திட்டத்தினை செம்மையாக நடாத்த தொண்டான்மை அடிப்படையில் உதவியதுடன், இந்த திட்டத்தினை பராமரிக்கும் பொறுப்பினை சமுகப்பணியில் முன்னின்று உழைத்து இயற்கையை அழியாது பாதுகாக்க திடசங்கற்ப்பட் கொண்டுள்ள உதயம் விளையாட்டுக்கழகம் பொதுமக்களுடன் இணைந்து பொறுப்பெடுத்துள்ளது.
இங்கு 35 மதுரை மரக்கன்றுகள் இந்த வீதி நெடுகிலும் நடுவதற்கு மண்ணணைப்பதற்க்கான உதவியினை திரு சாணக்கியன் உதவி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. சுற்றுச் சூழலை பாதுகாத்து நீண்டு நிலைத்திருக்கும் அபிவிருத்தியில் இந்த தேத்தாத்தீவு மண்ணுக்கு உரம் சேர்த்துவரும் திருவாளர் பா.கமலநாதன் அவர்களுக்கு பாராட்டினையும் அந்த ஊர் மக்களும், கழக அங்கத்தவர்களும் மனமுவந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மரம் செடிகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும், ஒரு இயற்கையான சூழ்நிலையை நமது இடத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம், அதனால் நம்மால் முடிந்த அளவு நம் வாழுகின்ற இடங்களில் மரங்கள் வைக்கவும், அதே போல மற்றவர்களையும் மரம் வளர்க்கவும் கூறும் ஒரு விழிப்புச் செயற்பாடாகவே இது அமைந்துள்ளது.
மனிதனின் முதல் நண்பன் மரம்!
மரத்தின் முதல் எதிரி மனிதன்!
ஆயுதங்களை மனிதன் அதிகம் பிரயோகித்தது மரங்களின் மீதுதான்!
உண்ண கனி,
ஒதுங்க நிழல்,
உடலுக்கு மருந்து,
உணர்வுக்கு விருந்து,
அடைய குடில்,
அடைக்க கதவு,
அழகு வேலி,
ஆட தூலி,
தடவ தைலம்,
தாளிக்க எண்ணை,
எழுத காகிதம்,
எரிக்க விறகு,
மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்!!
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!!
மனிதா மனிதனாக வேண்டுமா மரத்திடம் வா ஒவ்வொரு மரமும் போதி மரம்!!
















