மட்டக்களப்பு சமூகசேவைகள் அலுவலகம், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம், மட்டக்களப்பு மாவட்ட செலயகம் ஆகியன இணைந்து நடத்திய மாவட்ட சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், கிழக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் கே.குணநாதன்ஆகியோரும், கௌரவ அதிதிகளாக உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மாகாண சமூக சேவைகள் உதவிப் பணிப்பாளர் கே.பாந்தீபன், நிருவாக உத்தியோகத்தர் திருமதி என்.எஸ்.திரவியநாதன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இச் சர்வதேச முதியோர் தின நிகழ்வில், சர்வதேச முதியோர் வாரத்தையொட்டி, ஆக்கத்திறன் மற்றும் பொது அறிவுப் போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு பரிசு வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு, முதியோர்கள், மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், மாவட்டத்திலுள்ள வயது கூடிய முதியவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
விசேட நிகழ்வாக முதியோர்களின் சிறப்பை விளக்கும் பொருட்டான தாத்தா குறும்படமும் மாவட்ட சமூக சேவைகள் பிரிவால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய, கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே. குணநாதன், நகரமயமாக்கல், இயந்திரமயமாக்கல் காரணமாக, நாட்டில் முதியோர்கள் கைவிடப்படுகின்றனர். நீண்ட அனுபவமுடைய முதியோர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 30>000 வயோதிபர்கள் உள்ளனர். நகரில் 4 முதியோர் இல்லங்கள் உள்ளன. இவற்றில், 120 வயோதிபர்கள் பராமரிக்கப்படுகின்றனர். முதியோர்களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதற்காக, தேசிய செயலகம், தேசிய சபை மற்றும் கொழும்பில் மாத்திரம் இயங்கும் முதியோர் பராமரிப்புச் சபை என்பன உள்ளன.
கூட்டுக்குடும்பம் முறிந்து தனிக்குடும்பம் ஆனதால் முதியோரை பராமரிக்க முடியாமல் போனது. முன்பெல்லாம் கூட்டக்குடும்பத்துடன் முதியோர்கள் வாழ்ந்தனர். தற்போது அந்த நிலை அரிதாகக் காணப்படுகின்றது. இது எமக்கு பாரிய பழுவையும் வீண் செலவையும் ஏற்படுத்துகின்றது.
கூட்டுக்குடும்பத்தில் சிறுவர்களுக்கு ஒரு நோய் வரும் போது முதியோர்களின் அனுபவத்தால், வீட்டில் கிடைக்கக்கூடிய முகிலிகள் மற்றும் உணவுக்கு மணம் சேர்க்கும் பொருட்களைக் கொண்டு, கைமருந்து மூலம் தொற்றுக்களால் ஏற்படும் சாதாரண நோய்களுக்கு வைத்தியம் செய்தனர்.
முதியவர்கள் இல்லாமல் திருமணத்தின் பின்பு தனிக்குடித்தனம் சென்றதால் சிறிய நோய்களுக்கெல்லாம் வைத்தியசாலையை நாட வேண்டியுள்ளது. இது ஒரு மனவருத்தத்துக்குறிய விடயமாகும் என்று தெரிவித்தார்.












