கிணற்றிலிருந்து சிறுவன் சடலமாக மீட்பு

அம்பாறை மாவட்டத்தின், சம்மாந்துறை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சொறிக்கல்முனையில் வெள்ளிக்கிழமை (31) பிற்பகல் நான்கு வயது சிறுவனொருவன் நிலத்தடி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சொறிக்கல்முனை - 1, கிராமசேவகர் பிரிவினை சேர்ந்த ரவி அனுசாந்த் (வயது 04) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.


குறித்த சிறுவன் வெள்ளிக்கிழமை (31) வீட்டில் காணாத நிலையில் உறவினர்கள் சிறுவனை தேடியுள்ளனர். இதன் போது சிறுவன் கிணற்றினுள் வீழ்ந்து கிடந்துள்ளான்.

உடனடியான அயலவர்கள் குறித்த சிறுவனை மீட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதிலும் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், சம்மாந்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.