சுனாமிப் பேரழிவு நிகழ்ந்து 10 வருடங்கள் நிறைவுறும் தறுவாயில் பெண்களின் நிலை என்ன?

2014 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இந்து சமுத்திர சுனாமிப் பேரலை நிகழ்ந்து 10 வருடங்கள் நிறைவுறுகின்றன.    இந்த ஆழிப்பேரலையில் இழந்தவர்களையும் அழிந்தவற்றையும் நினைவு கூறும் அதேவேளை தப்பிப்பிழைத்த பல மக்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு என்ன நிகழ்ந்துள்ளது என்பதையும்  அவர்கள் தமது இடிந்த வீடுகளை மாத்திரமின்றி தமது அன்றாட வாழ்வையும் கட்டியெழுப்புவதில் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றமையையும் இத்தருணத்தில் நினைவில் கொள்ளவேண்டியது சமூகப் பொறுப்புள்ள மக்களினதும், சமூக நிறுவனங்களினதும், அரசினதும் பொறுப்பாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமியால் சுமார் 3000 மக்கள் இறந்தனர். பல சமூகங்கள் தமது சொந்த வாழிடங்களை இழந்தன. அரசின் வெற்றுப் பிரதேச (டீரககநச ணழநெ) கொள்கைக்கமைவாக அனேகமானோர் தங்களது சொந்தக் கிராமங்களின் எல்லைக்கு அப்பால் மீளக்குடியமர்த்தப்பட்டனர். இம் மக்களுக்கு அரச காணிகளில் இருந்தே பல்வேறு  பரப்பளவுகளில் நில ஒதுக்கீடு அளிக்கப்பட்டு பல்வேறு சர்வதேச, உள்ளுர் நிறுவனங்கள், அரசு ஆகியவற்றினால் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

அழிவுகள் அதிகம் நிகழ்ந்த நாவலடி, திருச்செந்தூர், டச்பார், கல்லடி மக்கள் இலங்கையிலேயே மிகப் பெரிய மீள்குடியேற்றப்பகுதியான திராய்மடுவில் மீளக் குடியேற்றப்பட்டன. பாசிக்குடாவில் வீடுகளை இழந்தோருக்கு பட்டியடிச்சேனையில் காணி வழங்கப்பட்டது, இத்துடன் வாகரை,  பாலமுனை போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது சொந்தக் காணிகளில் இருந்து புறம்பாக ஆனால் அவர்களது பிரதேசத்திலேயே மீள்குடியேற்றப்பட்டனர்.

சுனாமிப் பேரழிவு ஏற்பட்டு தற்போது 10 வருடங்கள் நிறைவுறும் இம்மாதத்தில் மேற்கூறிய மீள்குடியேற்ற இடங்களை ஆய்வு செய்தோம். இம்மக்களில் 55 குடும்பங்களுடன் ஆழமான நேர்காணலில் ஈடுபட்டோம். சில சாதகமான அம்சங்களை அவர்கள் வாழ்வில் சந்தித்த அதேவேளை தீர்க்கப்படாத பல சவால்களையும் இனம் கண்டோம்.

இன்றுவரை பெரும்பான்மையான குடும்பங்கள் தமது காணிக்கான சட்ட உரிமை ஆவணங்களை பெறவில்லை

உதாரணமாக: 899 வீட்டு அலகுகள் உள்ள திராய்மடுவில் 169 அலகுகளுக்கு பூரண அளிப்பு வந்துள்ளது எனவும் இவை மக்களுக்கு இன்னும் கையளிக்கப்படவில்லை எனவும் இதற்கு பொறுப்பான அரச உத்தியோகத்தர் தெரிவித்தார். அண்ணளவாக ஒவ்வொரு 11 குடும்பத்திலும் 2 குடும்பத்திற்கே பூரண அளிப்புவந்துள்ளதை இது காட்டுகின்றது. 

தகவல்களை பெற்றுக்கொள்வதில் உள்ள குறைபாடுகள்.

நாங்கள் சந்தித்த அனேகமானோர் தெரிவிக்கையில் தங்களது காணி உரிமைப் பத்திரங்கள் தொடர்பாகவோ அல்லது அவை எப்போது கிடைக்கும் என்பது தொடர்பாகவோ எந்தவிதமான தகவலும் தமக்கு தெரியாது எனத்தெரிவித்ததோடு அவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுவதும் கண்டறியப்பட்டது. 

மொழி

மக்களுக்கு தமக்குரிய உத்தியோகபூர்வ ஆவணங்களை தமது சொந்த மொழியான தமிழில் பெறுவதற்கு உரிமை உள்ள போதிலும், எமக்கு பார்க்கக் கிடைத்த கண்டலடியைச் சேர்ந்த குடும்பத்தினரின் அளிப்புப் பத்திரம் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது. இது ஆங்கிலம் தெரியாத மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதோடு இந்த அளிப்புப் பத்திரம் கூறுவது என்ன என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேறு நபர்களை நாட வேண்டியுள்ளது. 

பால்நிலை சார்ந்து காணியின் சட்ட உரிமைப் பத்திரம் பெறுவதில் உள்ள பிரச்சனை

வனஜா (பெயர்மாற்றப்பட்டுள்ளது) தனது அனுபவத்தினைப் பகிரும் போது, தனது கணவரினால் தொடர்ந்து பாரிய வீட்டு வன்முறைக்கு உள்ளாவதாகவும்; வீடு, காணி என்பன தனது கணவரின் பெயரிலேயே பதியப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

'அனைத்துமே அவரது பெயரில் உள்ளது. நாங்கள் அப்போது பிழை விட்டு விட்டோம். அவர் ஒரு குடிகாரர். நாங்கள் பயத்திலேயே வாழ்கின்றோம். எனக்கு ஒரு மகளே உள்ளார். ஆகையால் எப்படியோ மகளின் பெயருக்கு இவற்றை மாற்ற வேண்டும். ஆனால் தற்போது வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு எங்களை அவர் அச்சுறுத்துகின்றார்'

பொதுவாக வீட்டின் குடும்பத் தலைவரின் பெயராக ஆண்களின் பெயரையே பதியும்; பழக்கத்தினால் தங்களது சொந்தக்காணி உரிமையை இழக்க வேண்டிய நிலை வனஜாவைப் போன்ற பல பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எமது நேர்காணலின் போது மீள் குடியேற்றத்திற்கு முன்னர் 16 பெண்கள் (கிட்டத்தட்ட 30%) தமது சொந்த பெயரிலும் இரண்டு பெண்கள் தமது கணவருடன் சேர்த்து இணைந்த காணி உரிமையைப் பெற்றிருந்தனர். இருப்பினும் மீள்குடியேற்ற ஒப்பந்தங்கள், காணி, வீட்டு பதிவுக்கான படிவங்கள் ஆண்களின் பெயரிலேயே தரப்பட்டதாக ஆறு பெண்கள் தெரிவித்தனர். 

இவ்வாறு ஆண்களின் பெயரையே ஆவணங்கள் பதியும் பழக்கத்தினால் குறிப்பிடத்தக்களவு பெண்கள் (கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர்) தமது காணி, வீட்டு உரிமைகளை இழக்க வேண்டிய ஆபத்தில் உள்ளார்கள் இது மிக ஆழமாக அவதானிக்கப்பட் வேண்டியதாகும். 

அடிப்படை வசதிகளையும் வாழ்வாதாரத்தினையும் அடைவதில் உள்ள சவால்கள் 

மீள்குடியேற்றப்பட்ட சமூகங்கள் குறிப்பாக பெண்கள் தற்போது தமது வாழ்வாதார செயற்பாட்டில் தொடர்ந்தும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. 

உதாரணமாக: வாகரை மீள்குடியேற்றப் பகுதியில் இருந்து கடலுக்கு செல்வதற்கு சைக்கிள்களையே அனேகமான மீனவர்கள் பாவிக்கின்;றனர். ஆனால் அவர்கள் செல்லும் வழியில் தனியாரின் காணி, இறால் பண்ணை உள்ளதால் பல இடைஞ்சல்களை எதிர்நோக்குகின்றனர். 

வட்டவான் கடற்கரைப்பகுதியில் இருந்து உசனேற்றத்தில் குடியேற்றப்பட்ட மக்கள் தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். கோடை காலத்தில் அவர்களது கிணறுகள் வற்றிப் போகின்றன. அவர்களுக்கு பவுசர் மூலம் பல்வேறு  இடங்களில் உள்ள தண்ணீர் தாங்கிகளில் நீர் விடப்படுகின்றது. அவ்வாறு நீர் வராத சந்தர்ப்பத்தில் இரண்டு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு 300 ரூபாய்க்கு தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. 

உசனேற்றத்தில் ஆங்காங்கே குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ள போதிலும் அதிலிருந்து கிடைக்கும் நீர் மனித பாவனைக்கு உகந்ததல்ல.

அதனை தாம் பயன்படுத்துவதில்லை எங்களுக்கு காணிப் பிரச்சனையை விட தண்ணீர் பிரச்சனையே முதன்மையாக உள்ளது' என அம்மக்கள் கூறினர். 

மக்களை குடியமர்த்தும் போது சுற்றுச்சூழல் ஆய்வுகள் நடாத்தப்பட்டு பொருத்தமான இடம் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். ; 

2005 யூலை மாதம் மட்டக்களப்பில் நிகழ்ந்த 'சுனாமிக்கு பின்னரான மீள்கட்டுமானத்தில் பால்நிலை அக்கறைகள் தொடர்பான தெற்காசிய மாநாட்டில்' சுனிலா அபயசேகர அவர்கள் 'பாரபட்சமின்மைக்கு மதிப்பளிப்பதையும் சுனாமிக்கு முன்னர் சுரண்டல், ஒடுக்குமுறை என்பவற்றை அனுபவித்த சமூகப்பிரிவுகள், குழுமங்கள் மேலும் பாதிபப்டையக் கூடிய நிலைமைகளுக்கு செல்லாதிருத்தலை உறுதிப்படுத்தலையும்; எமது வழிகாட்டல் வரைச்சட்டமாகக் கொள்ளல் வேண்டும்' எனக்கூறினார்.

10 வருடங்களின் பின்னர் இன்று பார்க்கும் போது மேற்கூறிய நோக்கத்தை நிறைவேற்றுவதில் தோற்று விட்டோம் என்பதுடன் சமூகங்கள் குறிப்பாகப் பெண்கள் தொடர்ந்தும் காணி உரிமை, வாழ்வாதாரம், மொழி, ஆகியவை தொடர்பாக பாரபட்சத்தை அனுபவிப்பதுடன் வன்முறைக்கும் உள்ளாகின்றனர் என்பது வேதனை தருவதாகும். 

பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், மட்டக்களப்பு
கோரளைப்பற்று வடக்கு அபிவிருத்தி ஒன்றியம், வாகரை