குளிர் காரணமாக வயோதிபர் மரணம்

ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள சித்தாண்டியில் வெள்ளம்; காரணமாக வாயோதிபர் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

சித்தாண்டி 3இல் வசிக்கும் செல்லத்தம்பி விநாயகமூர்த்தி வயது (79) என்பவரே மரணடைந்துள்ளார்.
தற்போது நாட்டில் பெய்து வரும் அடை மழைகாரணமாக வீட்டுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.  இதன்போது அதிகமான குளிரினால் மரணடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை சித்தாண்டியில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதுடன் பல வீடுகளுக்குள் சுமார் 4 அடிக்குமேல் வெள்ளநீர் உயர்வடைந்திருக்கின்றது.
சித்தாண்டி 2ம் 3ம் ,4ம் கிராமசேவகர் பிரிவுகளிலுள்ள மக்கள் வெளியேறி இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சித்தாண்டி ஊடாக திருகோணமலை மட்டக்களப்பு பிரதான பாதையில் சுமார் 4 அடிக்குமேல் வெள்ளநீர் உயர்வடைந்துள்ளதால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுளள்து. குறைந்த பட்சமாக போக்குவரத்துச் சாராதிகள் மாற்று பாதையை பயன்படுத்திவருகின்றனர்.

ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவு, கிரான் தெற்கு பிரதேச செயலக பிரிவு, வாகரை வடக்கு பிரதேச செயலக பிரிவு போன்ற பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள தாழ் நிலப்பிரதேசங்கள் முற்று முழுதாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மாவட்ட அனர்த்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.