அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசத்துக்கான நிவாரண பணிகளில் மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன்

அண்மைக்காலமாக பெய்து வரும் அடை மழை காரணமாக அம்பாறை மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட குடும்பங்கள் அகதிகளாகியுள்ளனர். இவர்களுக்கான மனிதாபிபமான உதவிகளை அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் மேற்கொண்டு வருகின்றார்.

இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் வெளியிட்டுள்ள உதவி கோரும் அறிக்கையில்;

அம்பாறை மாவட்ட தமிழ்க் கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை தினம் தினம் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. மாவட்டத்தின் சகல பகுதிகளிலுமிருந்தும் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிரதேச செயலாளர்கள் இதுவிடயத்தில் கவனமெடுத்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினர் தாராளமாக உதவ முன்வர வேண்டும்.

இவ்வாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

நாமும் முடிந்தளவில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இது பாரிய இயற்கை அனர்த்தமாக பார்க்க வேண்டியிருக்கிறது. இன்னமும் மழை பெய்து கொண்டிருக்கிறது. எனவே நிலைமை மேலும் மோசமாகலாம்.

ஹங்கர்பிறி வேர்ல்ட் பவுண்டேசன் (Hunger Free World Foundation) வழங்கிய அரிசிப் பொதியினை காரைதீவு பாண்டிருப்பு போன்ற பிரதேசங்களுக்கு வழங்கினோம்.

முகாம்களில் அல்லது உறவினர் வீடுகளில் தங்கியிருந்த வெள்ள அகதிகளுக்கு முதன்முதல் அரிசிப்பொதியினை வழங்கியது தமிழ் சி.என்.என் இயக்குனர் திரு. அகிலன் அவர்களே. அதற்காக அவருக்கும் அவரது Hunger Free World Foundation ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் எம் தமிழ் உறவுகளின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைக் கூறுகிறேன்.

மேலும் உதவுபவர்கள் தாராளமாக உதவலாமென வேண்டுகோள் விடுக்கின்றேன். சில அகதி முகாம்களுக்கு இன்னமும் பிரதேச செயலாளர்கள் சென்று பார்க்கவில்லையென மக்கள் எம்மிடம் குறைபட்டுக் கொள்கின்றனர். உண்மையில் அது அவர்களுடைய அத்தியாவசிய கடமைகளுள் ஒன்று.

தனது பிரதேசத்தினுள் இடம்பெற்ற அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை 3 நாட்களாகியும் சென்று பார்க்கவில்லை அல்லது சமைத்த உணவை வழங்கவில்லை என்றால் யார் இதனைக் கவனிப்பது? அரசாங்கம் இதனை எவ்வகையில் பார்க்கிறது?

பல லட்சம் மைல்களுக்கு அப்பாலுள்ள புலம்பெயர்ந்த எம்மவர்கள் உடனடியாக உதவ முன்வந்திருக்கின்ற இவ்வேளையில் தமது கடமைக்குரித்தான செயற்பாடுகளை செய்யாமிலிருப்பவர்கள் தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் முறையிடவிருக்கின்றேன்.

கல்முனைப்பிரிவிலுள்ள துரவந்தியமேடு எனும் தமிழக் கிராமமக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு வேறு வரவழியில்லாமல் நிர்க்கதியாகியுள்ளனர். ஹெலியில் சென்று உணவு போட வேண்டும். இன்றேல் படகில் சென்று உணவு வழங்க வேண்டும்.

அங்குள்ள மக்களுக்கு உதவுதல் மிகப் பொருத்தமான சேவையாகக் கருதுகின்றேன். உதவுபவர்கள் தொடர்பு கொண்டால் உதவமுடியும். என்றார்.

தொடர்புகளுக்கு
மு.இராஜேஸ்வரன்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு
T.P : +94 77 1309998
Mail : murugesurajeswaran@yahoo.com