26வது மாவட்டத்தை உருவாக்கி தமிழர்களுக்கு துரோகமிழைப்பதற்கு த.தே.கூட கூட்டுச்சேர்ந்துள்ளது – சந்திரகாந்தன்

(சித்தாண்டி நித்தி) தமிழ் அரசுக் கட்சி அல்லது தமிழ்தேசிய கூட்டமைப்பு அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணி அம்பாறை மாவட்டத்திலே தனியான 26வது மாவட்டம் ஒன்றை உருவாக்கி தமிழர்களுக்கு துரோகமிழைப்பதற்கு இக்கூட்டணிகள் கூட்டுச்சேர்ந்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். 

ஏறாவூர்பற்று பிரதேச செயல பிரிவிற்குப்பட்ட களுவன்கேணி பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகான காரியாலயம் நேற்று (3) திறந்துவைத்து உரையாற்றும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு கருத்துதெரிவிக்கையில்;

கிழக்கு மாகாணத்திலே தீர்மானிக்கின்ற சக்தியாக நாங்கள் திகழவேண்டும், மாறாக கடந்த காலங்களைப் பேல் கோசங்களுக்காகவும், அவர்களின் உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களுக்காகவும் நாங்கள் பின்னே இழுபட்டச் செல்லமுடியாது. 

இப்பொழுது வந்திருக்கும் சூழல் மிகச் சாதகமான சந்தர்ப்பம், கடந்த காலங்களிலே சந்திரிக்கா பண்டாரநாயக்கா அல்லது பிரேமதாசாவாக இருக்கலாம் அல்லது ஜே.ஆர்.ஜேவர்த்தனவாக இருக்கலாம் அவர்களுடைய எல்லாக் காலத்திலும் அவர்களுடன் முஸ்லிம்கள் ஒட்டிக்கொண்டிருந்து எங்களுடைய மண் அழிகின்றபொழுது பாழ்பட்டு போகிறபொழுது நாங்கள் எல்லாம் இருளுக்குள்ளே மூழ்கிக் கிடந்தோம். மகிந்த ராஜபக்சா காலத்தில் தான் சற்று வெளிச்சத்தைக் கண்டிருக்கின்றோம். 

இந்த நிலை எமக்கு தொடர வேண்டுமாக இருந்தால் மகிந்தா ராஜபக்சாவை ஆதரித்து நிற்பது தான் நியாயம், அதனால் தான் நாங்கள் சொல்கின்றோம் நீங்கள் எல்லோரும் வெற்றிலைக்கு வாக்களியுங்கள் என்று. 

இல்லையேல் மீண்டும் பிரச்சினை, மீண்டும் அரசியல் கொந்தளிப்பு, மீண்டும் கடையடைப்பு, மீண்டும் புகைக்குண்டு, ஆங்காகங்கே பிரச்சினை, வெளிநாட்டு சக்திகள் உள்நுளையும் அங்கே பிரச்சினை, பாவம் அப்பாவி தழிழர்கள் நாங்கள் தான் சாவோம், எனவும் கருத்துதெரிவித்தார். 

இந் நிகழ்வின்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட களுவண்கேனி பிரதேசத்திலுள்ள மக்களுக்கான வெள்ள நிவாரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.