மட்டக்களப்பு மாவட்ட மக்களின் தேர்தல்கள மனநிலை


( ரவிப்ரியா )
  அரசியல் நிலவரம்


    மட்டக்களப்பு மாவட்டம் பூகோள ரீதியல் மாறுபட்ட மாவட்டமாகும். தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பரந்துபட்டு வாழும் பிரதேசமாகும். அவர்களின் தேவைகள் தனித்துவமானவை. வடக்கோடு ஒப்பிடும் போது இங்குள்ள நிலமைகள் வித்தியாசமானவை. எனவே அவர்களின் அரசியல் நோக்கும் சிக்கல் மிக்கதாகவே காணப்படுகின்றது. அரசியல் தெளிவு என்பது சலனத்திற்குரியதாகவே உள்ளது.


   எனினும் 50 வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் அரசியல் தெளிவு மிக்கவர்களாகவே காணப்படுகின்றார்கள். இது நகரப்பகுதிகளுக்கே பெருமளவு பொருந்துவதாக அமைகின்றது. கிராமப் புறங்களை எடுத்துக் கொண்டால் தமிழ் உணர்வுகள் அரசியல் கட்சிகளால் நன்கு விதைக்கப்பட்டிருக்கின்றது. எனவே கணிசமான அளவு தொகையினர் அந்த உணர்வுக்கே கால காலமாக கட்டுப்பட்டு வந்திருக்கின்றார்கள். இதை கடந்தகால தேர்தல் புள்ளி விபரங்கள் தெளிவு படுத்தியிருக்கின்றது.

   எனினும் சொல்லொண்ணா துயரங்களையும், உயிர் உடமை இழப்புக்களையும் சந்தித்தவர்களும் அவர்களே. எனவே அவர்களின் தேவை அதிகரித்துக் காணப்படுகின்றது. அதே வேளை இடம் பெயர்ந்தவர்களின் தேவைகள் முற்று முழுதாக பூர்த்தி செய்யப்படாத நிலையிலும் உள்ளது.

   அரசால் அத்தியாவசிய தேவைகளான மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, பாதைகள் பாலங்கள், விவசாய அபிவிருத்தி. கல்வி வள அபிவிருத்தி அவர்களின் மன நிலையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது இந்த ஜனாதிபதி தேர்தலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் கூட கணிசமான அளவு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும்.

  இதே வேளை நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் அடாவடித் தனங்களும், வாக்களர் மத்தியில் மாறுபட்ட நிலமையைத் தோற்றுவிக்கும், மனநிலையும் மேலோங்கக் கூடும். அமைதியான தேர்தலையே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். சுதந்திரமாக வாக்களிப்பதையே விரும்புவார்கள். இன்றேல் தேர்தலை புறக்கணிக்கும் நிலையும் ஏற்படலாம். இது இரு சாராரையும் வெகுவாகப் பாதிக்கும்.

  அரசியல் உரிமையில்லாத அபிவிருத்தி என்பது நிலையற்றது என்பது எதிர்தரப்பு தமிழ் அரசியல்வாதிகளின் முன்னுரிமைப்படுத்தப்பட்ட விடயமாகும்.


அதேவேளை ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் முதன்மைப்படுத்தப்பட்ட விடயமாக பாரிய அபிவிருத்தி சுட்டிக்காட்டப்படுகின்றது. அரசுக்கு எவ்வளவு ஆதரவு அளிக்கின்றோமோ அந்தளவிற்கு எமது பிரதேசம் அபிவிருத்தியடையும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. அதேபோல் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் அரசை ஆதரிப்பதன் மூலமே பெற்றக்கொள்வது சுலபமாக இருக்குமென்பது அவர்களின் நம்பிக்கை.


   சுமார் 30 வருடங்களாக சிங்கள தலைமைகளால்,  தமிழர் உரிமைகள் அண்மைக் காலம்வரை, மறுக்கப்பட்ட,  ஏமாற்றப்பட்ட வரலாற்றை எதிர்தரப்பினர் பட்டியலிட்டுக் காட்டுகின்றனர். இன்னமும் சிங்கள அரசியல் தலைமைகளை நம்புவது கேலிக்குரியது என்று கூறுகின்றாhகள். சுமார் 10 வருடங்களாக அரசுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற  அரசு சார்பான தமிழ் அரசியல்வாதிகள் இது தொடர்பாக, சாதித்ததென்ன என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.

   இந்த அடிப்படை விடயங்களே தேர்தல் களத்தில் முக்கிய விடயங்களாக இரு தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றது. இங்கு தேசிய தேர்தல் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வெளிநாட்டு சதி என்ற விடயத்தை தேவையற்ற தொன்றாகவே மக்கள் கருதுகின்றனர். குடும்ப ஆட்சியும், ஊழலும், பரவலாகப் பேசப்படும் விடயமாகக் காணப்படுகின்றது.          

மக்களின் மனநிலை 


   மக்களிடம் தேர்தல் தொடர்பாக உண்மையில் இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன தமிழ் தரப்பிற்கு ஆவது ஒன்றுமில்லை என்ற மனோ நிலையே மேலோங்கிக் காணப்படுகின்றது. இது இரு சாராரின் வாக்கு வங்கிகளையும் பாதிக்கும்.

  எனினும் அரசில் கட்சி என்ற பேதங்களுக்கப்பால் ஆட்சி மாற்றம் தேவை என்ற மனோ நிலையும் ஆங்காங்கே காணப்படுகின்றது. இது எதிர்தரப்பினருக்கச் சாதகமான ஒரு நிலையாகும். எனினும் இது வாக்களிக்கும் வீதத்தைக் கொண்டே கணிப்பிடக் கூடியதாக இருக்ககும்;.

   அபிவிருத்தியை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள் இது தொடர வேண்டும் என்ற மனநிலையில் காணப்படுகின்றார்கள். நிவாரணங்களில் நிலை கொண்டுள்ள மக்களும் அரசுக்கு அரசியல் நிவாரணம் வழங்கும் மன நிலையுடன் காணப்படுகின்றார்கள்.

  இது தவிர தமிழ் மக்களுக்கு எவ்வித விமோசனமும் அளிக்காத தேர்தலை புறக்கணிப்பது என்ற மனோபாவத்துடனும் சிலர் காணப்படுகின்றார்கள்.

  பிரபல தமிழ் கட்சி சொல்வதை செய்வதுதான் சரியென்ற மனோநிலையில் இன்னும் சிலர் வழக்கம்போல் இருக்கின்றனர். அதேபோல் அரச தரப்பு தமிழ் தலைவர்களுக்காக அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும்; சிலர் இருக்கின்றனர்.

  அத்தோடு கிழக்கிற்கென்று ஒரு தனித்துவம் இருக்கின்றது. எங்களுக்கும் ஓர் தலைமமைத்துவம் இருக்கின்றது. ஏன் நாம் வடக்குத் தலைவர்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற சிலமூத்த படித்த பிரஜைகளின் மனோநிலையும் காணப்படுகின்றது.

 அதேவேளை முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் அரசு சார்ந்த தலைமைத்துவங்களின் தனிப்பட்ட வாக்கு வங்கிகளைத் தவிர பொதுவாக அரசியல் மாற்றத்தை விரும்புகின்றவர்களின் செல்வாக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

  மொத்தத்தில் மக்கள் வாக்களிக்கும் வீதத்தைக் கொண்டே மட்டக்களப்பு மாவட்டத்தை வெல்லப் போவது யார் என்ற வினாவிற்கு விடை கிடைக்கும் எனலாம்.                                            
                                                                                   
வி.கே.ரவீந்திரன்