சுவிஸ் உதயத்தினால் சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு

(எம்.ஏ.றமீஸ்)
இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தை நினைவு கூறும் வகையில் சுவிஸ் உதயம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இன்று(03) மட்டக்களப்பு சித்தாண்டி யோகா சுவாமி சைவ மகளிர் இல்லத்தில் இடம்பெற்றது.

கிழக்கு உதயம் அமைப்பின் தலைவரும் ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எம்.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் கே.துரைநாயகம் உதவிச் செயலாளர் அம்பலவாணர் ராஜன்  கிழக்கு உதயம் அமைப்பின் செயலாளரும் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான பி.பாலச்சந்திரன் உப தலைவர் கலாபூஷணம் அக்கரைப்பாக்கியன் கிழக்கு உதயம் அமைப்பின் அங்கத்தவர்களான திருமதி அமிர்தலிங்கம் குறுஞ்சி பி.கந்தசாமி கே.சுரேஷ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதன்போது கலந்து கொண்டனர்.


இதன்போது அருட்சகோதரர் வஹிமதாஸ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வின்போது யோகா சுவாமி சைவ மகளிர் இல்லத்தில் உள்ள சுமார் 35 மாணவர்களுக்கு கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்  இல்லத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்கியும் வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் குறிப்பிடுகையில் பல்வேறான காரணங்களினால் உறவுகளை இழந்து இல்லங்களில் வசித்து வரும் மாணவர்கள் எந்தச் சிந்தனையிலும் காலத்தைக் கடத்தாமல் கல்வியில் மட்டும் கண்ணாய் இருந்து எதிர் காலத்தில் சாதிக்க முயற்சிக்க வேண்டும். ஒரு காலத்தில் எம்போன்றவர்களுக்கு நாம் உதவும் வகையில் வாழ்வில் உயர முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறான இல்லங்களை பராமரிப்பவர்கள் கடவுளுக்குச் சமமானவர்களாக நாம் பார்க்கின்றோம். அவர்களின் தியாகங்கள் பலவற்றால் பலர் உயிர் வாழ வழியேற்படுகின்றதென்றால் அது மிகையாகாது. இன்று எத்தனையோ செல்வந்தர்கள் எம்மத்தியில் காணப்பட்டாலும் ஏழைகளுக்கும் உறவுகளை இழந்தவர்களுக்கும் உதவி செய்ய சிலர் மட்டுமே முன்வருகின்றார்கள்.
எமது சுவிஸ் உதயம் அமைப்பு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து உதயமானது. அன்றிலிருந்து பல்வேறான உதவிகளை மக்களுக்காகச் செய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக மாணவர்களின் கற்றலுக்கு பாரியளவில் உதவிகள் பலவற்றைப் புரிந்து வருகின்றது. அந்த வகையில் எமது அமைப்பின் உதவியுடன் எதிர்காலத்தில் இவ்வில்லத்திற்கு உதவிகள் பலவற்றைச் செய்யவுள்ளோம் என்றார்.