( கேதீஸ் )ஆட்சி மாற்றம் இடம் பெற்றதுடன் எமக்கு நல்லதொரு காலம் வந்து விட்டது என்றும் புதிய அரசாங்கத்தை புகழ்ந்து கொண்டும் மட்டும் நாம் இருந்துவிட முடியாது.
மைத்திபால சிறி சேனாவும் அவர் தலைமையிலான கூட்டு அரசாங்கம் அதில் அங்கம் வகிக்கும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கா முன்னால் ஜனாதிபதி சந்திகா குமாரதுங்கா ஆகியா தமிழ் மக்களுக்கான நியாயமான நிரந்தர அரசியல் தீர்வை வழங்குவதற்கான மன நிலையுடன் செயற்பட வேண்டும் அவர்களுக்கு அவ்வாறான மன அழுத்தம் வர வேண்டும்.
இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்ற காணாமல் போனவர்களின் உறவுகள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்…
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வை தருவதற்கான ஆக்க
பூர்வமான செயற்பாடுகளை செய்யும்போது மட்டுமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த அரசாங்கத்திற்கு தொடர்சியாக ஆதரவை வழங்கும் அதை விடுத்து இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களைப் போன்று வாக்குறுதிகளை மட்டும் வழங்கிக்கொண்டு எம்மை ஏமாற்றுவதாக இருந்தால் இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பணியை முன்னெடுக்கும்.
இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் முதல் தடவையாக கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தினத்தில் எம் உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வை செய்திருந்தோம். எல்லோரும் நினைக்கலாம் கடந்த அரசு போல் இல்லாமல் இந்த அரசு இதை செய்வதற்கு சுதந்திரம் தந்துள்ளார்கள் என்று ஆனால் இம்முறையும் பொலிஸாரால் இதற்கு தடை உத்தரவு தருமாறு மட்டக்களப்பு நீதிமன்றில் முறைப்பாடு செய்திருந்தார்கள். ஆனால் நீதிபதி அதற்குரிய நியாயமான விளக்கத்தை கொடுத்து தடை உத்தரவுக்கான அனுமதியை வழங்கவில்லை.
எல்லோரும் நினைக்கலாம் ஜனாதிபதி மாறினால் எல்லாம் மாறிவிட்டது என்று இன்னும் நிலைமைகள் முழுமையாக மாறவில்லை. தமிழ் மக்களுக்கெதிரான அடக்கு முறை மாறவேண்டும் இதனால்தான் ஆட்சி மாற்றத்தை ஒட்டு மொத்த தமிழ் மக்களும் விரும்பினார்கள். இந்த அரசும் அவ்வாறான பிழைகளை செய்யாது தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வை தர அக்கறையுடன் செயற்படவேண்டும் என்றார்.












