கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாற்றம் நிகழுமா?

(தீரன்)
இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சிமாற்றத்தின் தாக்கம் கிழக்குப் பல்கலைக்கழகத்தையும் விட்டுவைக்கவில்லை நிர்வாக மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென ஒரு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுவரும் அதேவேளை மறுபுறம் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தேவை நிர்வாக மாற்றமல்ல நிர்வாகங்களை ஆக்கிரமிக்கும் அரசியல் தலைமைகளையும், குழுக்களையும் இல்லாமல் செய்வதே என்கின்றனர்.

உண்மையில் கிழக்குப்பல்கலைக்கழகம் என்பது தமிழ் பேசும் சமூகத்தின் உயர்ந்த அடையாளமாகும். அங்கு கல்வி கற்பிக்கும் விரிவுரையாளர்கள் அந்த சமூகத்தின் நிகழ்காலமாக பார்க்கப்பட வேண்டியவர்கள் அங்கு கல்வி கற்கின்ற மாணவர்கள் அந்த சமூகத்தின் எதிர்காலமாக பார்க்கப்பட வேண்டியவர்கள்.

இன்நிலையில் தமிழ் பேசும் மக்களின் நிகழ்காலமும் எதிர்காலமும் மோதிக்கொள்ளுமாகவிருந்தால் அந்த இனத்தின் தனித்துவமான அடையாளங்கள் மிகவிரைவில் அழிந்துபோய்விடும்.

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் வளங்களை முடக்கி அவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த உரிமை போராட்டத்தை வீழ்த்துவதற்கு இலங்கை அரசாங்கம் தமிழர்களின் மூளையாக செயற்பட்ட வடகிழக்கு பல்கலைக்கழகங்களை குறிவைத்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது.

அந்த வகையில் தமிழ் மக்களின் விடுதலை மூச்சாக செயற்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தை செயற்திறன் அற்றதாக மாற்றுவதற்கு அப்போதைய அரசாங்கம் விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்தவர்களை பயன்படுத்தி பல்கலைக்கழக நிர்வாகங்களை ஆக்கிரமித்ததுடன் பல்கலைக்கழக நிர்வாகம் சுயமாக இயங்குவதற்கும் தடையாக இருந்தனர்.

இதைவிட கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் இரண்டாக பிளவுபடுவதற்கும், பிரதேச வாதக்கருத்துக்கள் மேலோங்குவதற்கும், கல்வியில் விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்தவர்களின் தலையீடு அதிகரிப்பதற்கும் கிழக்குப்பல்கலைக்கழகம் பங்குவகித்தது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட அதேவேளை தமிழ் தேசியத்திற்காக செயற்பட்டதன் காரணமாக பொருளியற்துறை வி;ரிவுரையாளர் தம்பையா அவர்களையும், உபவேந்தர் ரவீந்திரநாத் அவர்களையும் கிழக்குப்பல்கலைக்கழகம் இழந்தும் உள்ளது.


இதனால் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் கலைகலாசார அடையாளங்கள் குறித்தும், தமிழ் பேசும் மக்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு திட்டங்கள் குறித்தும், தமிழ் பேசும் சமூகம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய வடகிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகங்கள் பதவிகளுக்காகவும், அரசின் ஆதரவை பெறுவதற்காகவும் தங்களுக்குள்ளே மோதிக்கொள்வதுடன் அதற்காக மாணவர்களையும் போராடுவதற்கு தூண்டிவிடுகின்றனர்.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று நடைபெற்றுள்ள இக்காலகட்டத்தில் அரச நிர்வாகங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில் கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்திலும் மாற்றங்கள் இடம்பெறுமா? என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் நிர்வாக மாற்றம் நடைபெறுமா? கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் இருக்கின்ற நிர்வாகத்தை மாற்றவேண்டுமா? அல்லது அரசியல் தலையீடுகளை நிறுத்த வேண்டுமா? இன்றைய சூழ்நிலையில் எது முக்கியதேவையாகவுள்ளது.

குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் மாணவர்கள்

கிழக்குப்பல்கலைக் கழக உபவேந்தர் குறித்தும் அவரின் வாக்குறுதிகள் குறித்தும் மிக காரசாரமான குற்றச்சாட்டுக்களை மாணவர்கள் முன்வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கான விடுதிகளை பெற்றுத்தரவில்லை, தன்னாமுனை விடுதியில் உள்ள மாணவர்களை பல்கலைக்கழக விடுதியுடன் இணைப்பதாக கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, கடந்த பேரவையில் அங்கம் வகித்த ஊழல்வாதிகள் இருவரை மீண்டும் இணைத்துள்ளனர், முன்னாள் மாணவர் ஒன்றிய அங்கத்தவர்கள் மீதான வழக்குகள் மீளப்பெறவேண்டும், கண்காணிப்பு கருவிகளை பொறுத்தி மாணவர்களை கண்காணிப்பதனால் மாணவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகின்றது, மாணவர்கள் தொடர்ச்சியாக அடக்கப்படுகின்றனர், முறைகேடான நியமனங்கள் நடைபெறுகின்றது, மாணவர் ஒன்றியத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது,அரசியல்வாதிகளின் கைப்புள்ளையாக கிழக்குப்பல்கலைகழக நிர்வாகம் செயற்படுவதை நிறுத்தவேண்டும் போன்ற பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன் அதற்கான ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

உபவேந்தரின் கருத்துக்கள்

மாணவர்களின் ஆர்ப்பாட்டமானது குறிப்பிட்ட சில ஆசிரியர்களின் சுயநலத்திற்காக அப்பாவி மாணவர்களை பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளை ஏற்படுத்திவருகின்றனர். 


குறிப்பிட்ட ஆசிரியர்கள் காலம் காலமாக உபவேந்தர் கதிரைக்காக ஆசைப்பட்டு போட்டிபோட்டு பேரவையினால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் உபவேந்தர் பதவிக்காக தற்பொழுது அரசாங்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் பயன்படுத்தி கதிரையை அடைவதற்கு மாணவர்களைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.



இங்கு நடைபெற்ற மாணவர் கவனயீர்ப்பு போராட்டமானது கிழக்குப் பல்கலைக்கழக ஒட்டுமொத்த போராட்டமல்ல கலைகலாசார பீடத்திலுள்ள ஒரு சில மாணவர்களினால் முதலாம் வருட மாணவர்களை தவறான முறையில் பயன்படுத்தி நடைபெற்ற செயற்பாடாகவே நான் கருதுகின்றேன்.

மாணவர்கள் ஜனநாயக முறையில் போராட வேண்டுமாகயிருந்தால் பல்கலைக்கழக உபவேந்தருக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்கவேண்டும். ஆனால் அப்படியொன்றும் நடைபெறவில்லை. 



எவ்விதமான முன் அறிவித்தலுமின்றி ஊடகங்களில் செய்திகள் வரவேண்டும் என்பதற்காக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழல் நடைபெறுவதாக காட்டி குறிப்பிட்ட ஆசிரியர்கள் சிலரின் தூண்டுதலில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.



கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு உட்ப்பட்ட நிருவாகத்தில் ஊழல் நடந்திருந்தால் தகுந்த ஆதாரத்துடன் ஊழல் மற்றும் லஞ்ச ஆணைக்குழுவுக்கு அல்லது உயர் கல்வி அமைச்சருக்கு ஆவணங்களை அனுப்பி வைத்திருக்கவேண்டும். அதைவிடுத்து இவ்வாறான கீழ்தரமான செயற்பாடுகளை முன்னெடுப்பது படித்த அறிவாளிகளின் நாகரிகமான செயற்பாடா?


சுயதேவைக்காக அப்பாவி மாணவர்களைத் தூண்டி நடைபெற்ற இச்செயற்பாடு மிகவும் கீழ்தரமான செயற்பாடாக பார்க்கப்படவேண்டும்.
இவ்வாறன செயற்பாடுகளில் பல்கலைக்கழகத்திலுள்ள சுமார் 5பேர் கொண்ட மாணவர்குழுக்களே ஈடுபடுகின்றனர்.


இது ஜனநாயக முறைப்படி நடந்த போராட்டமும் இல்லை, இது உபவேந்தரை நீக்கிவிட்டு கதிரையை பிடிக்க ஆசைப்படும் குறிப்பட்ட நபர்களின் செயற்பாடாகும். இதற்காக அப்பாவி மாணவர்களை தவறான முறையில் வழி நடத்திவருகின்றமை மிகவும் மனவேதனையான விடயமாகவிருக்கின்றது. 

இது சம்பந்தமாக மட்டக்களப்பு மக்களை தெளிவுபடுத்தவேண்டும் என்பதை கேட்டுக்கொள்வதோடு, உபவேந்தர் ஊழல் செய்ததாக ஆதாரம் இருந்தால் அவர்கள் படித்தவர்கள் என்ற முறையில் உரிய இடத்தில் சமர்ப்பிக்கவேண்டும் அதைவிடுத்து தெருவில்போவதைப் போன்றோ படியாதவர்களைப்போன்று கீழ்தரமான செயற்பாடுகளை முன்னனெடுப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை.


அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மைக்காலமாக நிர்வாகத்தேவைகள் கருதி ஒரு சில இடங்களில் சிசிரிவி கமெரா பொருத்தப்பட்டுள்ளது அதுதொடர்பாகவும் நாங்கள் தற்பொழுது கவனமெடுத்திருக்கின்றோம்.



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபொழுது நல்லதொரு நிலமை நாட்டில் உருவாகியிருக்கின்றது அதன் காரணமாக ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட கமெரா அகற்றுவது தொடர்பாக, அதனடிப்படையில் தற்பொழுது சிசிரிவி கமெரா அகற்றப்பட்டுள்ளது.




கடந்த காலத்தில் பல்கலைக்கழக சட்டத்துக்கு முரணாக செயற்பட்டு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற வழக்கில் இருக்கும் மாணவர்கள் தங்களின் வழக்கில் இருந்துவிடுபடுவதற்கு அப்பாவி மாணவர்களை பலிக்கடாவாக்குகின்றனர். இதைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் சிலர் உபவேந்தர் பதவியை அடைவதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளைப் முன்னெடுக்கின்றனர் என்று தற்போதைய உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா அவர்கள் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.



யார் அடுத்த உபவேந்தர்?

கடந்த 2014ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான உபவேந்தர் தெரிவுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது அதற்காக ஏற்கனவே கிழக்குப்பல்கலைக்கழக பேரவையினால் நடத்தப்ட்ட வாக்கெடுப்பில்  15 வாக்குகளை பெற்று முதல் இடத்திற்கு தெரிவான தற்போதைய உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா அவர்கள் மீண்டும் பேரவையினால் உபவேந்தராக தெரிவுசெய்யப்பட்டு அது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த நியமனம் அப்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் தெரிவுக்காக காத்திருந்த சமயத்தில் ஜனாதிபதி தேர்தல் காரணமாக உபவேந்தர் பதவிக்கான தெரிவுகள் பிற்போடப்பட்டிருந்தன.

இன்நிலையில் மீண்டும் இம்மாத இறுதிக்குள் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரின் நியமனம் இடம்பெறலாம் என எதிர்வு கூறப்படும் நிலையில் ஏற்கனவே பல்கலைக்கழக பேரவையினால் தெரிவுசெய்யப்பட்ட கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா அவர்கள் மீண்டும் உபவேந்தராக தெரிவுசெய்யப்படுவாரா? அல்லது அதற்கு அடுத்தபடியாக இருக்கின்ற கலாநிதி பிரேம்குமார் அவர்கள் உபவேந்தராக தெரிவுசெய்யப்படுவாரா? அல்லது இவர்களின் போட்டிக்கு மத்தியில் இவர்களுக்கு அடுத்தபடியாகவுள்ள கலாநிதி மர்சூத் அவர்கள் உபவேந்தராக தெரிவுசெய்யப்படுவாரா? அல்லது தற்போதுள்ள உபவேந்தரை எவ்வாறு முன்னால் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்கள் கிழக்கில் உள்ள அரசியல் வாதிகள் மற்றும் சிவில்சமூக பிரதிநிதிகளின் ஆலோசனைக்கு அமைய வெளியில் இருந்து தெரிவு செய்திருந்தாரோ அதேபோன்ற தெரிவு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவினால் முன்னெடுக்கப்படுமா? என்ற பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கிழக்கு சிவில் சமூகம் சார்ந்தவர்களின்  கருத்துக்களையும் நாம் உள்வாங்கியிருந்தோம்.


அந்தவகையில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரை மாற்றம் செய்யவேண்டுமென்று ஒரு குழுவினர் கூட்டமைப்பின் சட்டத்தரணியூடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக கூறியுள்ளனர்.

அதேநேரம் நூறு நாள் வேலைத்திட்டம் நிறைவேற்றப்படும்வரை நிர்வாக தலைமைகளை மாற்றுவது சம்பந்தமாக கவனம் செலுத்ததேவையில்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.


இதேபோன்று கிழக்கில் உள்ள பலர் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தாலும் அது எவ்வாறான மாற்றம் என்பதை குறிப்பிட்டு கூற மறுப்பதுடன் உபவேந்தரை மாற்றவேண்டும் என்று கூறுகின்றவர்கள் அடுத்த உபவேந்தராக இவரைத்தான் கொண்டுவரவேண்டும் என உறுதியாக கூறமறுக்கின்றனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குள் பாரிய மாற்றம் ஒன்று தேவை என கூறும் சிலர் அந்த மாற்றமானது நிர்வாக ரீதியான மாற்றம் என்பதற்கு அப்பால் உளரீதியான மாற்றமே தேவை என்கின்றனர்.

 அத்துடன் பல்கலைக்கழகத்திற்குள் இருக்கின்ற அதிகாரபோட்டிகள் நிறுத்தப்பட்டு, நிர்வாக ரீதியாகவும், குழுக்களாகவும் பிரிந்து நின்று சுயநலத்திற்காக தங்களுக்குள் மோதிக்கொள்வதை விடுத்து தமிழ் பேசும் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசியல், பதவி, பிரதேசவாதம் என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்து பல்கலைக்கழக சமூகம் வெளியேறவேண்டுமென்றே பலர் எதிர்பார்க்கின்றனர்.


தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்திற்காக பொறுப்புமிக்க சமூகமாக மீண்டும் பல்கலைக்கழக சமூகம் மாற்றமடைய வேண்டும், மனித உரிமைகளுக்காகவும், மனிதநேயத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்காகவும் போராடவேண்டியவர்கள், மிகக்குறுகிய எண்ணங்களுக்காக வீதிகளில் இறங்குவது வெட்கப்பட வேண்டியதாகவுள்ளது.



அதேநேரம் மாணவர்களின் உணர்வுகளை மதிக்காது அவர்களின் நியாயமானதும், சமூக அக்கறைகொண்டதுமான ஜனநாயக ரீதியான ஆர்ப்பாட்டங்களை கல்வி, நிர்வாகம் என்ற காரணங்களை காட்டி நசுக்கமுற்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.



அதாவது தமிழ் பேசும் சமூகத்திற்கான பிரச்சினைகள் இன்னும் முழுமையாக தீர்க்கப்படாத சூழ்நிலையில் கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் அவற்றையெல்லாம் மறந்து புறந்தள்ளி தமிழ் மக்களுக்கு இலங்கையில் எந்தப்பிரச்சினையும் இல்லை என்ற தோரணையில் இனியும் செயற்படாது. பொறுப்புவாய்ந்த சமூகம் என்ற வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்க கூடிய புத்திஜீவிகளின் பிறப்பிடமாக கிழக்குப் பல்கலைக்கழகம் மாற்றமடையவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

எனவே கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குள் மாற்றம் ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்பதில் பலர் பல முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது. அதில் சிலர் நிர்வாக ரீதியான மாற்றம் நிகழவேண்டும் எனவும் பலர் கொள்கைரீதியான, தமிழ் உணர்வு சார்ந்த, உளவியல் மாற்றம் நிகழவேண்டுமெனவும் கூறியுள்ளனர்.

எம்மை பொறுத்தமட்டில் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மைத்திரியின் ஆட்சியில் கிழக்குப் பல்கலைக்கழகமும் விதிவிலக்கல்ல அங்கும் மாற்றம் ஒன்று நிகழுமென்றே தெரிகிறது. உபவேந்தர் இந்த மாதமோ அல்லது இன்னும் மூன்று வருடங்களுக்கு பின்னரோ கட்டாயம் மாற்றப்படுவார். ஆனால் யார் அடுத்த உபவேந்தர்? என்ற கேள்விக்கு இன்னும் யாரிடமும் பதில் இல்லை என்னை பொறுத்தமட்டில் ஒரு பிரச்சினையை தூக்கிவிட்டு இன்னுமொரு பிரச்சினையை அந்த இடத்தில் வைக்காமல் காலத்தின் தேவை கருதி எது முக்கியமோ அதை எல்லோரும் ஒன்றுபட்டு செய்வதே சிறந்ததாக இருக்கும்.
-தீரன்-