‘இந்நிலமை தொடரக்கூடாது என்பது மக்களாகிய உங்கள் விருப்பமாக இருக்கிறது. வடிகால்வாய்களுடன் கூடிய வீதிகள் அமைக்கப்படல் வேண்டும் என்பது உங்களது கோரிக்கையாக இருக்கின்றது. உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியவர்கள் அரசும் அரச தலைவர்களுமாவர். அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவக்கூடும். இதுவரைகாலத்திலும் அரசசார்பற்ற பல நிறுவனங்கள் உங்களுக்கு பல்வேறு விடயங்களில் உதவியுள்ளன. ஆனால் உங்களது முக்கிய முதன்மையான தேவைகள் நிறைவு செய்யப்படல் வேண்டும் என்பதை செஞ்சிலுவை இயக்கம் உணர்ந்து கொள்கின்றது. வாய்ப்பும் வசதிகளும் வரும்போது உங்கள் முதன்மையான தேவையை நிறைவு செய்ய செஞ்சிலுவை அமைப்பு ஏனையவர்களுடன் சேர்ந்து முயற்சிகளை மேற்கோள்ளும்.
அதே நேரம் சாதாரணகாலத்தில் தன்னைத் தயார் செய்து ஆபத்துக்காலத்தில் மக்களுக்கு உதவுவதே செஞ்சிலுவை சங்கத்தின் முக்கிய பணி. ஆனால் மக்களது பங்களிப்பின்றி அப்பணியை சிறப்பாக செய்ய முடியாது. அதனால் முன்வந்த கிராமங்களில் செஞ்சிலுவை அலகுகளை அமைத்திருக்கிறோம் மேலும் கோரிக்கை வருகின்ற கிராமங்களில் புதிய செஞ்சிலுவை அலகுகளை அமைத்து வருகின்றோம். அலகுகளினூடாக மக்களின் இயலுமையை பெருக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்’
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பட்டாபுரம் செஞ்சிலுவை அலகின் 2015ம் ஆண்டு சந்திப்பின்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக்கிளையின் தலைவர் த. வசந்தராஜா இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பினை இலங்கை செஞ்சிலுவைச் சங்க போரதீவுபபற்று வெல்லாவெளிப் பிரிவின் தலைவரும் மட்டக்களப்புக் கிளையின் பொருளாளருமான வடிவேல் சக்திவேல் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் பட்டாபுரம் கிராம அபிவிரித்தி சங்கத்தின் தலைவர் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.












