புதிய அரசாங்கம் எங்களை புறக்கணித்துள்ளது! - சீ.யோகேஸ்வரன்

(த.லோகதக்சன்)
புதிய அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவை வழங்கியும் கூட எங்களை புறக்கணித்துள்ளனர். இந்த அரசு நியாயமானது என்றால் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழ் மக்களுக்கு தந்திருக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்கு உட்பட்ட செங்கலடி ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு வித்தியாலய மைதானத்தில் வித்தியாலய அதிபர் எஸ்.மனோகரன் தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.பாலசுப்பிரமணியம், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் எஸ்.ஜெயராஜ், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பிர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்!

யுத்த சூழல் காரணமாக இந்த மண்ணில் பலவற்றை நாங்கள் இழந்துள்ளோம். கல்வி மட்டும் எம்மிடருந்து பறிக்கப்படவில்லை. அம்பாறையுடன் மட்டக்களப்பு இணைந்திருந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கியது என்பதற்கு சுவாமி விபுலானந்தரே சிறந்த சான்று.

இப்பொழுது கல்வி நிலையில் பல இன்னல்களை அனுபவிக்கின்றோம். அரசியல் சூழல் தற்போது மாறினாலும் தமிழ் மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள் இன்னும் மாறியதாக இல்லை. கடந்த காலத்தில் பாடசாலைகள் இராணுவ முகாம்களான மாற்றப்பட்டன. மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ணா வித்தியாலயம் இன்றும் கூட இராணுவ முகாமாகவே உள்ளது.

தற்போது மாறியிருக்கும் ஆட்சியை நன்கு பயன்படுத்தி எங்களது கல்வி நிலையை மேம்படுத்தக் கூடிய வகையில் பாடசாலை கல்விக்கான வளங்களை தேட வேண்டும். யுத்தத்துக்கு முன்னரும், யுத்தத்தின் போதும், யுத்தம் முடிவடைந்து ஆட்சி மாற்றம் வந்த பின்னரும் தமிழ் மக்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

கிழக்கு மாகாண ஆட்சியாளர்களால் நியமனங்களில் நாங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டோம். ஆனால் நாங்கள் ஆட்சி நடத்தினால் அவ்வாறு செய்ய மாட்டோம். கிழக்கு மாகாணத்தில் நாங்கள் தனித்து நின்று பலமான ஆட்சி அமைப்பதற்கு மக்கள் போதுமான ஆதரவு தராத காரணத்தால் நாங்கள் மற்றவர்களிடம் கெஞ்ச வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான நியாயம் வேண்டும் என்று போராடிய இனம் நாங்கள். இந்த நாட்டில் தமிழ் மொழி நீதிமன்றம் உட்பட சகல இடங்களிலும் அரசகரும மொழியாக இருக்க வேண்டும் என்று சத்தியாக்கிரகம் செய்தவர்களும் நாங்கள். இப்பொழுதும் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் உரிமை வேண்டுமென்று போரடி வருபவர்களும் நாங்கள்.

மாகாண சபை ஆட்சி முறை கூட எமக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் அதை தெளிவாக அனுபவிக்க முடியாதவர்களாக நாம் இருக்கின்றோம். கூடிய ஆசனங்களை கொண்ட கிழக்கு மாகாண சபையில் தமிழர்களுக்கான முதலமைச்சர் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு நியாயமானது என்றால் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழ் மக்களுக்கு தந்திருக்க வேண்டும் என்றார்.