(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு கல்லடிவேலூரைப் பிறப்பிடமாகவும் திருக்கோவிலை வதிவிடமாகவும் கொண்ட அகில இலங்கை சமாதான நீதிவான் சாமித்தம்பி விவேகானந்தன் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் மொழி பெயர்ப்பாளராக யாழ் மாவட்ட நீதிபதி அ.அ.ஆனந்தராஜா முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் விவசாய விஞ்ஞானமானி பட்டம் பெற்றுள்ளதுடன் ஆங்கிலமொழியில் பல்வேறு தேர்ச்சிகளையும் பட்டங்களையும் பெற்றவராவார்.
ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பல்வேறு அரசசார்பற் ற நிறுவனங்களில் பல்வேறு துறைகளில் கடமையாற்றியதுடன், துறைசார் அறிவியல் மேம்பாடுமற்றும் கருத்தரங்கு மகாநாடுகளில் கலந்துகொள்ள இந்தியா, சிங்கபூர், சீனா போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளார்.
இவர் ஆங்கில சேவைக்கால ஆலோசகர் அமரர் பொ.சாமித்தம்பி (நேசராசா) திருமதி லெட்சுமி சாமித்தம்பி ஓய்வுபெற்ற ஆசிரியை ஆகியோரின் சிரேஷ்ட புதல்வருமாவார்.
சமூகசேவையாளரும் சமயப்பற்றாளரும் எழுத்தாளரும் கவித்திறன் படைத்தவருமாகிய இவர் மட் - சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் சிவானந்தியன் விளையாட்டுக்கழகம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் ஆயுட்கால உறுப்பினருமாவார்.












