மூதூர் கிழக்கிற்கு தனியான கல்விக் கோட்டம் உருவாக்குமாறு கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் அமைச்சரிடம் வேண்டுகோள்!

(சுழற்சி நிருபர்)
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்குப் பிரதேசத்திலுள்;ள 30 இற்கும் மேற்பட்ட தமிழ் பாடசாலைகளை இணைத்து தனியானதொரு கல்விக் கோட்டத்தை உருவாக்குமாறு கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக அதன் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா தெரிவித்தார்.

இவ்வேண்டுகோளை தமது அமைப்பு கல்வி இராஜாங்க அமைச்சர் ஆர். ராதாகிருஷ்ணனிடம் விடுத்துள்ளதாக ஜெயராஜா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் அமைச்சருக்கு கையளித்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் கிழக்குப் பிரதேசம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெருநிலப் பகுதியாகும். இங்கு சுமார் 30 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடசாலைகள் உள்ளன.

இப்பாடசாலைகள் அனைத்தம் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றன.
இப்பிரதேசப் பாடசாலைகளுக்கு வளப்பகிர்வுகளும் ஒழுங்காக மேற்கொள்ளப்படுவதில்லை.

எனவே மூதூர் கிழக்கில் தனியானதொரு கோட்டம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் அப்பிரதேச அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு காணமுடியும்.
இந்த வேண்டுகோளை அக்கறையோடு பரிசீலித்து இப்பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் கேட்டுக் கொள்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.