சந்திவெளி நாகலிங்கேஸ்வரர் சிவாலய கும்பாபிஷேக நிகழ்வு

(சித்தாண்டி நித்தி) கிழக்கிலங்கை மட்டக்களப்பு சந்திவெளி ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் சிவாலய சம்ரோக்ஷன அஷ்டபந்தன ஏக குண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக பெருவிழா 2015 நிகழ்வானது கடந்த வியாழக்கிழமை (05) ஆரம்பமாகி பிரஷ்டா பிரதமகுரு யாழ்ப்பாண தம்பசிட்டி பருத்திதுறை பண்டாரி அம்பாள் ஆலய பிரதம குருவும் ஆதீன கர்த்தாவும் சக்தி உபாசகர் சிவஸ்ரீ சபா பாஸ்கரக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

கும்பாபிஷேக பெருவிழா நிகழ்வானது ஆலயத்தின் ஆதீனகர்த்தாவும் ஆலய பிரதம குருவுமாகிய சிவஸ்ரீ வெ.கமலநாதசர்மா அவர்களின் ஒழுங்கமைப்பில் தை 26 நாள் (09.02.2015) திங்கள் கிழமை காலை 6.00 மணி முதல் விசேட பூசைகளுடன் ஆரம்பமாகி நடைபெற்றதுடன் சுப வேளையில் சிவபக்தியுடன் கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

சந்திவெளி கிராமத்தில் கோயில் கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயமானது புதிதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வானது முதலாவது தடவையான சிறப்பான முறையில் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

எண்ணெய்க் காப்பு நிகழ்வானது தை 25 நாள் (08.02.2015) ஞாயிற்று கிழமை காலை 8.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை பக்தர்களினால் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் நடைபெற்றது.

சந்திவெளி ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் சிவாலய கும்பாபிஷேக பெருவிழா விசேட பூசையில் அதிகளவாக பக்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் நடைபெற்ற பூசைகளிலும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.