பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டில் புலிக்கூத்தில் ஆடிப் பழகியமை தொடர்பான அனுபவப் பகிர்வு

(சித்தாண்டி நித்தி) ஆய்வுச் செயற்பாடு செயல்மையம்ளூ சமுதாயமையம் சார்ந்ததாக அமைய வேண்டும் எனும் நோக்குடன் நுண்கலைத்துறையினர் பல முன்னெடுப்புக்களை மேற்கொள்கின்றனர். அப்போதே அது ஆய்வுப் பொருளுக்கும், ஆய்வு செய்பவருக்கும், ஆய்வின் செயற்பாட்டை மேற்கொள்ளும் சமுதாயத்தினருக்கும், பயன்பாட்டைத் தரக்கூடியதாக அமையும் என்பதாகும். அந்த எண்ணக்கருவின் வெளிப்பாட்டுடன் ஆராய்வினை மேற்கொள்ளும் பார்வைகளை கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள் முன்னெடுத்து வழிப்படுத்துகின்றார். அதிலொன்று 'புலிக் கூத்து பாரம்பரியமாகும்'. இது ஈழத்துக் கூத்தாய்வு வரலாற்றில் கவனிக்கப்படாததும் விடுபட்டதுமாகும்.  இதனால், இதனை அந்தந்தப் பிரதேசத்திற்குச் சென்று செய்து பங்குகொண்டு கற்கவேண்டும்ளூ ஆராய வேண்டும் எனும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டது.  இச்செயற்பாட்டில் ஒன்றே வாகரை - அம்மந்தனாவெளியில் உள்ள புலிக்கூத்துக்காரரிடம் சென்று அச்சமுதாய சூழலிலேயே ஆராய்ச்சியை மேற்கொள்ளும் போது செய்து கற்றுக் கொண்டேன். 

எனக்கு 'வேடன்' பாத்திரம் தரப்பட்டது. நான் வேடனுக்கு கூத்தில் ஆடியது இதுவே முதல் தடவையாகும். அதை அண்ணாவியார் வழிப்படுத்த, ஊரில் கூத்தில் வேடனுக்காடிய சிவகுமார் பழக்கினார். நடிப்பு, பாரம்பரிய அரங்க சூழலில் பரீட்சயம் இருந்ததனால் அதன் ஆட்ட முறைகள், சம்பவ வெளிப்பாடுகள், அதில்வரும் அசைவுகள், நடிப்புகளை கற்றுக் கொள்ள கூடியதாக இருந்தது. வேடனும் அவனது மனைவியும் தேனெடுக்கச் செல்லும் போது, காடுகளைக் கடத்தல், காட்டுக்குள்ளே புகுந்து தவழ்ந்து செல்லுதல் போன்றன தாளக்கட்டு, மத்தள அடிக்கேற்ப செயற்படுத்த வேண்டும் எனப்பட்டது. ஆடிக்காட்டினர். அதனைக் கற்றுக் கொண்டோம். பின்னர், தேன் பூச்சியைக் கண்டவுடன் அது செல்லும் இடத்திற்குத் (விரைவான ஆட்டத்துடன்) தேடிச்சென்று அதனை அடையாளம் காணுதல் மிக வேகமான ஆட்டமாக இருந்தது. இது இன்னுமொரு அசைவுடன் வெளிபட வேண்டும் எனவும், நாலடியை நீட்டி வைத்து ஆட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது. அதனையும் அறிந்து செய்து காட்டினேன். அதன் பின்னர் தேன் 'கூடு' கட்டியுள்ள மரத்தை நாடி அதில் உள்ள தேன்வதையினை எடுப்பதற்காக கை கோடரியால் துப்பரவு செய்தல், அதனை வெட்டும் போது சத்தம் கேட்டு தூங்கியிருந்த புலி  உறுமுதல், அதனை மனைவி மூலம் வேடன் அறிதல் என்பன கற்றுத் தரப்பட்டன. பின்னர் புலியுடன் சண்டையிடுதல் அதில் வரும் ஆட்ட வேகம் தாளத்தினை உள்வாங்குதல், புலிக்கு அம்பு எய்தல் என்பன செய்து கற்றுக் கொடுத்ததால் மேலும் விளங்கக் கூடியதாக இருந்தது.

அத்தோடு, இக்கூத்தினை அது பயிலும் சமுதாயத்தினரிடம் சென்று கற்கும்போது அச்சமுதாயமே ஒன்றுகூடி தமது மகிழ்வையும், விருப்பையும் வெளிப்படுத்தியது. தமது உறவினர்களிடமும் அண்ணாவியாரிடமும் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் வந்து கூத்துப் பழகும் போது மேலும் பூரிப்பும் இன்பமும் நிறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. மேலும் அவர்களுக்கு அங்கிகாரமும் அந்தஸ்த்தும் கொடுக்கப்பட்டதை உணர்ந்தனர். புலிக்கூத்து நிபுணத்துவமுள்ள சமுதாயத்திடம் சென்று கற்றுக்கொண்டமையானது, எமக்கு புலிக்கூத்து தெரியுமெனும் ஓர்மையுடன் மகிழ்ச்சியையும் தந்தது. கூத்தாய்வு வெறுமனே தகவல் வழங்கிகளாக பாரம்பரிய கலைஞர்களை பயன்படுத்தாது பங்குகொண்டு அவர்களையும் முன்னிலைப்படுத்திளூ அறிமுகப்படுத்தி அவர்களிடம் கற்றுக்கொண்டு அவர்களது வல்லபத்தை விளங்கிச் செயற்படுதல் அத்தியாவசியமானது என்பது பங்குகொள் கற்றலினூடாகக் கிடைத்தது. 
கூத்தினைப் பழகிய பின்னர் அக்கிராம மக்களிடம் உரையாடலை மேற்கொண்டோம். அவ்வேளையில் தமது ஊர்சார்ந்த வழிபாடுகள் அவர்களது வாழ்வாதாரத் தொழில் முறைகள், ஊர்ச் சிறுவர்களின் கற்றல் செயற்பாடுகள், தொழில் தொடர்பான விடயம் போன்றவை கலந்துரையாடப்பட்டன. அப்போது இரண்டு வருடமாக மழையில்லாததால் மீன்பிடித் தொழில் செய்யும் குளங்கள், ஆறுகள் வற்றியதால் தொழில் இன்றித் தவிப்பதை வெளிப்படுத்தினர். அத்தோடு, நுண் - கடன் அரக்கன் பற்றியும் அதனால் ஏற்படும் துன்பங்களையும் அதில் ஈடேற முடியாததையும், மெல்ல மெல்ல வரிசைப்படுத்தினர். கிழமைக்கு இரண்டு தடவை கட்டும் கடன், மாதாந்தம் கட்டும் கடன் என்பன பற்றியும் கடன் அறவிட வருபவர்கள் அவர்களை பொருத்தமற்ற வார்த்தைகளைக் கூறி கடன் அறவிடும் தன்மை, மாலை ஆறுமணி வரையும் அவர்கள் ஊரினுள் திரிதல் என்பன பற்றியும் வெளிப்பட்டன.

இதனால், தனிநபர் மற்றும் குடும்பம் மற்றும் ஊர்களில் ஏற்படும் பிரச்சினைகளும் வெளிப்பட்டன. கடனாளிகளாக்கப்பட்டதால் மன அழுத்தத்துடன் நடமாடும் மனிதர்களாக அவர்கள் விளங்கினர். குடும்பங்களுக்குள் ஏற்படும் சண்டை, அது கடன் வசூலிப்பவர்களால் மேலும் உச்சமடையும் போக்கு, குடும்பத்தாரால் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல முடியாது அவதியுறுதல் என்பன கலந்துரையாடப்பட்டன. கஷ்டப்பட்டு சமைப்பதற்கு வைத்திருந்த பணத்தைக்கூட ஏசி பறித்தெடுப்பதை கடன் வசூலிப்போர் செய்வதனால், தங்களது பிள்ளைகள் உணவின்றி பசியால் வருந்துவதையும் வெளிப்படுத்தினர். அந்தவேளையில் கடன் தொடர்பான, எமக்குத் தெரிந்த விடங்களையும் இவ்வாறே எமது பிரதேசத்தில் நடைபெறும் சம்பவங்களையும் எடுத்துக்கூறி விளக்கமளித்தோம். அத்தோடு, கடன் அறவிடும் அட்டையில் எத்தனை மாதம் அறவிட்டார்கள்? எனக் குறிப்பிடுவதும் இல்லை எனவும் கூறினர். அக்கிராமங்கள் படும் துயரும் கூத்துப் பாரம்பரியங்களால் அவர்களுக்குக் கிடைக்கும் மகிழ்வும் கொண்டாட்டமும் சமமாக வெளிப்பட்டது. ஆராய்வுகளை இவ்வாறு சமுதாயம் சார்ந்து செய்யும்போது அதன் மையம் இன்று பல விடயங்களை இணங்கண்டு செயற்பட முடியும் என்பதை உணர்த்தியது. 

பழகிய புலிக்கூத்தினை வந்தாறுமூலை கண்ணகி அம்மன் கோவில் முன்றலில் அரங்கேற்றியபோது அதிகமான சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இன்புற்றனர். மனம்விட்டு சிரித்து மகிழ்ந்தனர். பிரத்தியேக வகுப்பிற்கு போய்விட்டு வந்த சிறுவர்கள் பெற்றோர்களின் கைப்பிடியில் இருந்து விலத்தி ஓடிவந்து பார்த்து மகிழ்வதனைக் காண முடிந்தது. ஊரில் கூத்து பழகும்போதே சிறுவர்களும் சிறுமிகளும் அதேபோல செய்து பழகினர். நாங்கள் பழகி முடிய தாம் பழகியதை அப்படியே செய்து காட்டினர். இது கூத்தரங்கு ஒரு திறந்த பல்கலைக்கழகம் என்பதைக் காட்டியது. செய்து கற்றலை இயல்பாகவே கூத்தரங்கு தரும் என்பதையும் ஊருக்குள் சென்று பழகியபோது உணர்த்தியது. அத்தோடு, கூத்தரங்கு சமுதாயம் தழுவிய ஒன்று. மக்களை ஒன்றிணைக்கும் ஒன்று. ஆதலால் அது சமகாலத்தில் அவசியமானது என்பதனையும் மேலும் வெளிப்படுத்தியது. இந்த சந்தர்ப்பத்தையும் அந்தஸ்தையும் கொடுத்த ஆய்வாளர் ந.துஷ்யந்திக்கு எனது நன்றிகள். 
சு.சந்திரகுமார்