முடிந்தால் வாருங்கள். இன்றேல் மாகாணசபையை கலைத்து தேர்தலை நடாத்துங்கள் ஆட்சியமைத்துக்காட்டுகின்றோம்.

கிழக்கில் மூவின மக்களுடன்கூடிய கூட்டாட்சிதான் அமையமுடியும். நாம் எமது கொள்கையிலிருந்து வழுவாது ஒரு இணக்கப்பாட்டுனான கூட்டாட்சியை அமைக்க தயாராகவுள்ளோம்.  முடிந்தால் வாருங்கள். இன்றேல் மாகாணசபையைக்கலைத்து தேர்தலை நடாத்துங்கள். நாம் எமது பலத்தை நிருபித்து முதலமைச்சருடன் உறுதியான ஆட்சியமைத்துக்காட்டுகின்றோம்.


இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபையின் மூத்த உறுப்பினரான இரா.துரைரட்ணம் நேற்று சவால்விடுத்தார்..
கிழக்கின் ஆட்சியமைப்பதிலேற்பட்டுள்ள இழுபறிநிலை தொடர்பாக இறுதியாகக் கேட்டபோது அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
சனத்தொகை அடிப்படையிலும் உறுப்பினரடிப்படையிலும் உயர்ந்த ஸ்தானத்திலிருக்கின்றபோதிலும்  முதலமைச்சரைப்பெறவோ ஆட்சியமைக்கவோ முடியாமல் ஸ்தம்பிதநிலைiயையடைந்துள்ளது. கிழக்கில் ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அனுமதிக்கமுடியாது.
மூவினமக்களும் சமாதானமாக சகோதரர்களாக தொடர்ந்து கிழக்கில் வாழவேண்டும். எனவே பரஸ்பரம் விட்டுக்கொடுப்புகள் புரிந்துணர்வுகளுடாக கூட்டாட்சியை அமைத்து மூவினமக்களும் மகிழ்ச்சியாக வாழ நீதியானஆட்சியமைக்கவேண்டும்.
தமிழ்மக்களை நட்டாற்றில் விடமுடியாது:
\
கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆட்சியமைப்பு விடயத்தில் இழுபறிநிலை தொடர்கிறது. அதற்காக கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்மக்களை நட்டாற்றில் விடமுடியாது. கிழக்கு தமிழ் உறுப்பினர்கள் முன்வத்த தீர்வை தலைமைகள் மறுத்தன. எனின்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமைகள் மாற்று பொறிமுறையை முன்வைக்கவேண்டும்.
எமது பேச்சைக்கேட்டு மாற்றத்திற்காக மைத்ரிபாலவிற்கு வாக்களித்த தமிழ்மக்களை நாம் ஏமாற்றமுடியாது.கிழக்கு நிலவரம் எமக்குத்தான் தெரியும்.மக்களில்லாமல் அரசியல் இல்லை. மக்களுக்காகத்தான் அனைத்தும். அவர்களது அபிலாசைகளை புறந்தள்ளிவிட்டு அரசியல் நடாத்தமுடியாது.வரலாறு பூராக தவறுகளையே செய்து வரலாறே தவறாகிவிடக்கூடாது.
கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களை எமது த.தே.கூட்டமைப்பு கொண்டிருந்தபோதிலும் விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டதனால் கடந்த இருவருட காலத்தில் கிழக்குவாழ் தமிழ்மக்களும் பிரதேசங்களும் பாரிய புறக்கணிப்பை எதிர்கொண்டன.
இனியும் அதனைத் தொடர அனுமதிக்கமுடியாது.கிழக்கில் 40வீத தமிழர்களும் 37வீத முஸ்லிம்களும் 23வீத சிங்களவரும் உள்ள நிலையில் தமிழ்த்தரப்பினருக்கு முதலமைச்சர் உள்ளிட்ட ஆட்சியதிகாரத்தை பெறுவதில் தார்மீக உரிமையுள்ளது. அதனை கிழக்கின் மற்றுமொரு சிறுபான்மைச்சமுகத்துடன் இணைந்தாவது பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியமுள்ளது. இன்றேல் எமது மக்களிடம் நாம் செல்லமுடியாது.
முதலமைச்சர் மற்றும் மாகாணசபை அமைப்பில் எழும் முட்டுக்கட்டைக்கு மாற்றுப்பொறிமுறையை முன்வைப்பதனூடாக ஆட்சியை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இன்றைய ஜனாதிபதிக்காக ஒட்டுமொத்த வாக்குகளையும் அளித்தவர்கள் நாங்கள். எனவே எமது தமிழ்மக்களை நட்டாற்றில்விடமுடியாது.
எனவே த.தே.கூட்டமைப்புத் தலைமைகள் விரைந்து மாற்றுப்பொறிமுறையை முன்வைத்து தமிழ்மக்களின் எதிர்காலத்தை நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டிய தவசியம்.அதனை அவர்கள் இரண்டொரு தினங்களில் நிறைவேற்றுவார்களென நம்புகிறேன் என்றார்.