கூட்டமைப்பை நிகழ்வுகளுக்கு அழைக்க கூடாது என அச்சுறுத்தியவர்கள் இன்று காணாமல் போயுள்ளனர்!-பிரசன்னா

(தீரன்)
கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை நிகழ்வுகளுக்கு அழைக்கக் கூடாது என அச்சுறுத்திய அரசியல் வாதிகள் பலர் இன்று காணாமல் போயுள்ளனர் அவர்களை மக்கள் புறக்கணித்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உதவி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

களுவன்கேணி நெடியமடு  அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உறையாற்றுகையில்

கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சியில் இருந்த பலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைக்க கூடாது என அதிகாரிகளை அச்சுறுத்திய சம்பவங்கள் பல நடைபெற்றுள்ளது. கடந்த காலங்களில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை நிகழ்வுகளுக்கு அழைப்பதற்கு அதிகாரிகள் அச்சப்பட்டனர். ஆனால் இன்று கூட்டமைப்பு  கிழக்கு மாகாணசபை ஆட்சியில் பங்கெடுத்ததன் மூலம் நாம் இந்த பாடசாலை நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளோம். எனவே காலங்கள் மாறும் என்பதை புரிந்துகொண்டு அனைவரும் செயற்படவேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைக்க கூடாது என அச்சுறுத்திய அரசியல் வாதிகள் பலர் இன்று காணாமல் போயுள்ளனர் அவர்களை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.