பின்தங்கிய நிலையிலுள்ள ஏறாவூர்ப் பற்றுப் பிரதேசப் பாடசாலைகள் முன்னேற வேண்டியதன் அவசியம் தற்போது உணரப்பட்டிருக்கின்றது என மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் தெரிவித்தார்,
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் சிரேஷ்ட ஆசிரியரும் பிரதி அதிபருமான என். இராஜதுரையின் 25 வருட ஆசிரியர் சேவையைப் பாராட்டும் நிகழ்வு திங்களன்று பாடசாலை அதிபர் எஸ். தில்லைநாதன் தலைமையில் இடம்பெற்றது.
ஆசிரியர் சேவையின் வெள்ளி விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மட்டக்களப்பு கல்விப் பாஸ்கரன் தொடர்ந்து உரையாற்றினார்.
ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்ற போதும் வளப்பற்றாக்குறையோடு காணப்படு;கின்றது.
கலைமகள் மகா வித்தியாலயத்தில் சமீபத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றபோதும் அதற்கான வளங்கள், ஆசிரியர்கள் இல்லாத நிலையிலேயே மாணவர்கள் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களை இந்த வளப்பற்றாக்குறையோடுதான் நாம் ஊக்கப்படுத்தி வழிகாட்ட வேண்டியிருக்கின்றது.
இந்தப் பாடசாலையில் மிக முக்கியமாக வகுப்பறைத் தேவைகள் இருக்கின்றன. அவற்றையும் சீரான முறையில் நிறைவேற்ற வேண்டும்.
இந்தப் பாடசாலையில் ஒன்று கூடல் மண்டபம் கூட இல்லை. இதற்காக ஏதாவது விஷேட அபிவிருத்தித் திட்டங்கள் கிடைக்கப் பெறுமாக இருந்தால் நான் முன்னுரிமையின் அடிப்படையில் இந்தப் பாடசாலைக்கு ஒன்று கூடல் மண்டபம் அமைக்க முடிந்த ஏற்பாடுகளைச் செய்வேன்.
கடந்த வருடம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கட்டிடத்தைத் திருத்தியமைப்பதற்காக 5 இலட்ச ரூபாவை வழங்க முடிந்தது.
இந்தப் பிரதேசத்தில் உள்ள கல்வியில் ஆர்வமுள்ளோர் மேலும் இந்தப் பாடசாலையை முன்னேற்றப் பாடுபடவேண்டும்.
அதேவேளை தற்போதைய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கவை. அவர்களுக்கு எமது கல்விப் பணிமனை நன்றி தெரிவிக்கின்றது.
இன்று தனது ஆசிரியர் சேவையில் வெள்ளி விழாவை நிறைவு செய்யும் பாடசாலையின் பிரதி அதிபர் என். இராஜதுரை இரவு பகலாக இந்தப் பாடசாலைக்கு தன்னைத் தியாகம் செய்து அரும்பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். அத்தகைய ஒரு பெருந்தகையின் பாராட்டு விழாவில் நான் கலந்து கொண்டிருப்பதையிட்டுப் பெருமையடைகின்றேன் என்றார்.
ஆசிரியர் சேவையில் சிரேஷ்ட நிலையிலுள்ள பாடசாலை அதிபர் எஸ்.தில்லைநாதன், விஜயலெட்சுமி குகதாஸன், யோகேஸ்வரி ஆனந்தகுமார் ஆகியோரும் பாராட்டப்பட்டனர் நிலாவேணி சாந்தகுமார் ஆகியோரும் நிகழ்வில் கௌரவிக்கப்ட்டனர்.
நிகழ்வில் கல்விக்காக ஒரே தடவையில் 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணசிங்ஹ பிறேமதாஸ அவர்கள் நினைவு கூரப்பட்டார்.
நிகழ்வில் ஏறாவூர்ப் பற்று பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம். பாலசுப்பிரமணியம் அமீரலி வித்தியாலய அதிபர் எஸ். அப்துல் கபூர், ஐயங்கேணி வித்தியாலய அதிபர் எம். மனோகரன் உள்ளிட்டோரும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.












