(சிவம், வரதன் & எஸ்.சதீஸ்)
பெண்களுக்கான சிறந்த நாடு எனும் கருப் பொருளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு நகரில் இன்று (13) நடைபெற்றது.
வாழ்வின் எழுற்சி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுற்சி சமூக அபிவிருத்தி மன்றம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த ஊர்வலம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலகப் பிரிவின் 48 கிராம சேவகர் பிரிவுகளிலுமுள்ள சமுர்த்தி சங்கங்களின் அங்கத்தினர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் செயலகத்திலிருந்து ஆரம்பமாகி சுங்க வீதி, நகர மத்திய வீதி வழியாக பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.
பெண்கள் நாட்டின் கண்கள், தியாக சிந்தனை படைத்த பெண்ணினத்தைப் பெருமைப் படுத்துவோம், பொறுமையுள்ள பெண்ணிற்கு சமவுரிமை வழங்குங்கள், பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்மையைக் காப்பாற்றுவோம், பெண்களை என்றும் முன்னிலைப் படுத்துவோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் தாங்கியிருந்தனர்.
ஊர்வலத்தின் முடிவில் செயலக வளாகத்தில் சூரியா பெண்கள் அமைப்பினால் ஒளியை நோக்கி எனும் தலைப்பில் வீதி நாடகம் இடம்பெற்றது.
பெண்கள் தேவைகளை பரிந்துரை செய்யும் வலையமைப்பின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்கள் வலுவூட்டல் மற்றும் உரிமைகள் பற்றி பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு உரையாற்றினார்.
மேலும் இந் நிகழ்வில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் குறைந்த வருமானம்பெறும் 18 பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்புக்காக தலா 10000/= வீதம் 180,000/= நிதியுதவியும் பிரதேச செயலாளரினால் டேபா மண்டபத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.












