(சித்தாண்டி நித்தி) பாடசாலையில் படித்தவர்கள் கவிதை கூறுவார்களே தவிர மண்ணுக்காக போராடிய மாவீரர்களை எவரும் கூறுவதில்லை. ஆகவே அதையும் இன்று பாடசாலையின் சார்பாக மரணித்த அனைத்து மாவீரர்களையும் நான் நினைவுகூறுகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திலுள்ள வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் இன்று (10) செவ்வாக்கிழமை நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நடைபெற்ற விளையாட்டுப்போட்டி நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை அமைச்சர் துரைராஜசிங்கம் மற்றும் கல்குடா கல்வி வலய அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
தொடர்ந்தும் அங்கு அவர் உரையாற்றுகையில்;
ஆட்சி மாற்றம் என்பது ஏன் வந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். தற்பொழுது ஜனாதிபதி மைத்திரிசிறிசேனா அவர்களிடம் கொண்ட பாசத்தினால் நாங்கள் வாக்களிக்கவில்லை, இதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். மஹிந்த ராஜாபக்சாவின் வெறுப்பு காரணமாகத்தான் நாங்கள் வாக்களித்தோம். இது தான் உண்மை.
அவ்வாறு வாக்களித்ததன் நிமிர்த்தமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்திலே இன்றுடன் 62 நாட்கள் கடந்திருக்கின்றது. இன்னும் இருப்பது 38 நாட்கள் மாத்திரமே.
மீதியாகவிருக்கும் 38 நாட்களுக்குள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருக்ககூடிய விடங்களை நிறைவேற்றுவார்களா? இல்லையா? என்பது ஒரு ? குறிதான்!. அவர்கள் நிறைவேற்றுவார்கள் அல்லது நிறைவேற்றாமல் விடுவார்கள்.
ஆனால் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாற்றம் என்பதில் நாங்கள் என்ன? மாற்றத்தைக் கண்டிருக்கின்றோம் என்றால் ஒரு சில மாற்றங்களே வந்திருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியதிற்கு இனங்க வடமாகாணத்திலே இருக்ககூடிய ஆளுனர் மாற்றப்பட்டிருக்கின்றார். அங்கு முதலமைச்சரின் செயலாளர் மாற்றப்பட்டிருக்கின்றார்.
கிழக்கு மாகாணத்திலே ஆளுனர் மாற்றப்பட்டிருக்கின்றார். இதைவிட பெரிய மாற்றங்கள் என்று எதுவும் இல்லை.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல விளையாட்டு நிகழ்வுகளுக்கு செல்கின்றது இதுவும் ஒரு மாற்றம், இந்த மாற்றம் வராமல் இருந்திருந்தால் வந்தாறுமூலையில் நடைபெற்ற இவ் விளையாட்டு நிகழ்வுக்கு நாங்கள் வந்திருக்கமாட்டோம். இது தான் உண்மை.
ஆனால் பல மாற்றங்கள் வரவேண்டும் என்பதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். குறிப்பாக வடகிழக்கு மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.












