மீண்டும் பறிபோகிறது ஏறாவூர் எல்லை நகர் மைதானம் -அரச அதிகாரிகளின் வேண்டுகோளும் நிராகரிப்பு!(photos)

(தீரன்)
கடந்த 48 வருடங்களுக்கு முன்னர் ஏறாவூர் நான்காம் குறிச்சி பட்டினசபை வீட்டுத்திட்டத்திற்காக (டிசிகுவாட்டஸ்) ஒதுக்கப்பட்ட விளையாட்டு மைதானம், மற்றும் சிறுவர் பூங்காவுக்கான காணியை மீண்டும்நீதிமன்ற களஞ்சியத்திற்காக பறித்தெடுத்துள்ளதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி ஏறாவூர் நான்கு, எல்லைநகர், ஐயன்கேணி, செங்கலடி-01 கிராம மக்கள் மற்றும் விளையாட்டு கழகங்கள் அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றிணை அனுப்பிவைத்துள்ளனர்.

காலம் காலமாக ஏறாவூர் நான்கு, எல்லைநகர், ஐயன்கேணி, செங்கலடி-01 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஏறாவூர் எல்லை வீதியில் உள்ள டிசி குவாட்டஸ் மைதானத்தை இன, மத, பேதமின்றிப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

குறித்த மைதானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏறாவூர் நகரசபையின் முதல்வராக இருந்த அலிசாகீர் மௌலானா அவர்கள் மைதானத்தை பயன்படுத்திவரும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஏறாவூர் பொலீஸ் நிலையத்திற்கான விடுதி அமைப்பதற்கு வழங்கியிருந்தபோது அதனை தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் திட்டமென கூறிய கிராம மக்கள் கடந்த 21.05.2014 திகதியிடப்பட்ட மகஜர் ஒன்றினை அரசாங்க அதிபருக்கு வழங்கியதன் காரணமாக ஏறாவூர் பொலீஸ் நிலையத்திற்கான விடுதி அமைக்கும் செயற்திட்டம் நிறுத்தப்பட்டதாக கூறும் விளையாட்டுக் கழகத்தினர் தற்போது மீண்டும் நீதிமன்றக் களஞ்சியத்திற்காக குறித்த மைதானத்தில் சிறுவர் பூங்காவிற்காக அமைக்கப்பட்ட அத்திவாரங்கள் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு உள்ளதோடு அதில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி மீண்டுமொருமுறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு இந்த மகஜரினை அனுப்பியுள்ளதாக கூறினர்.

அரச அதிகாரிகளின் வேண்டுகோளை நிராகரித்து செயற்படுகின்றதா ஏறாவூர் நகரசபை?

ஏறாவூர் நகரசபையின் நிர்வாகத்திற்குள் இருக்கும் குறித்த மைதானத்தின் காணிதொடர்பான பதிவுகள் இன்னும் உத்தியோகவூர்வமாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக நிர்வாகத்திடமிருந்து ஒப்படைக்கப்படாத நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கோரிக்கைகளை நிராகரித்து ஏறாவூர் நகரசபை நிர்வாகம் செயற்பட்டுள்ளதாக குறித்த மைதானத்தை பயன்படுத்திவரும் விளையாட்டுக் கழக தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் அவர்களின் கையொப்பமிடப்பட்ட 09.03.2015 திகதியிடப்பட்ட கடிதத்தில் ஏறாவூர் நகர சபை தவிசாளருக்கு பின்வரும் அறிவுருத்தல்களை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் அவர்கள் அனுப்பியுள்ளார்.

அதாவது எல்லை நகர் விளையாட்டு மைதானத்தை நீதிமன்ற களஞ்சியமாக மாற்றுதலை தடைசெய்யக் கோரியும், தற்போது டிசி குவாட்டஸ் மைதானமாக பாவிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் காணியானது இது வரை தங்களது உள்ளுராட்சி மன்றத்திற்கு முறையாக பாராதீனப்படுத்தப்படவில்லை என்றும் இதனை முறையாக பாராதீனப்படுத்துவதற்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளரினால் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டு மாகாண காணி ஆணையாளரின் அனுமதியுடன் இக்காணி பாராதீனப்படுத்தப்படல் வேண்டும் என்றும் அவ்வாறு அல்லாது தாங்கள் தொடர்ந்தும் எமது அனுமதியின்றி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதனால் நாம் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றோம். 

இவ்வாறான நிலையில் குறித்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தக்கோரி கிராம மட்ட அமைப்புக்கள் போன்றனவற்றிடம் இருந்து தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளதால் தங்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்துமாறும் தங்களுக்கு தேவையான காணியினை பெற்றுத்தருவதற்கு தளவாய் கிராம உத்தியோகத்தர் பிரிவில் புன்னைக்குடா வீதியில் அமைந்துள்ள எல்.ஆர்.சி.க்கு(LRC) சொந்தமான காணி இணங்காணப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றேன் என ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் அவர்கள் அறிவித்தும் அதனை புறந்தள்ளி காலம் காலமாக ஏறாவூர் தமிழ் பிரதேச இளைஞர்கள் பயன்படுத்தி வரும் மைதானத்தை அபிவிருத்தி என்ற பெயரில் ஆக்கிரமிக்க முயற்சிப்பதன் நோக்கம் என்ன என்பதை ஏறாவூர் நகரசபை தெளிவுபடுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே ஏறாவூர் பொலீஸ் நிலையத்திற்கான விடுதி அமைப்பதற்கு குறித்த மைதானம் ஒதுக்கப்பட்ட போது அதனை பொதுமக்களின் எதிர்ப்புக் காரணமாக இடைநிறுத்தியவர்கள் மீண்டும் நீதிமன்றக் களஞ்சியம் அமைப்பதற்கு அதே மைதானத்தை ஒதுக்குவதென்பது குறித்த பிரதேச மக்களை உதாசீனப்படுத்தி அவர்களது வழமையான செயற்பாடுகளை குழப்புவதற்கு சமனானது என்பதோடு பொலீஸ் நிலையங்களும், நீதிமன்றங்களும் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர மக்களுக்கு எதிராகவோ மக்களின் உரிமைகளை பரிப்பதற்காகவோ உருவாக்கப்பட்ட ஒன்றல்ல எனவே குறித்த மைதானத்தில் விளையாடும் பொதுமக்களினதும், இளைஞர்களினதும் உரிமையை பரிக்க முற்படுவதை சகலரும் ஒன்றிணைந்து நிறுத்தவேண்டுமென கிராம அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



இது குறித்து அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ள மகஜரின் முழுவிபரம்

 விளையாட்டு மைதானத்தை நீதிமன்றக் களஞ்சியமாக மாற்றுததலை தடை செய்யக் கோரல்

எல்லைநகரில் அமைந்துள்ள யுனைட்டட் மைதானமானது கடந்த 36 வருடகாலமாக இப்பகுதியில் உள்ள மக்களால் விளையாட்டு மைதானமாகவும் சிறுவர் பூங்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த  வன்செயலின் பின்னர் இம்மைதானம் எவ்வித புனருத்தாபன வேலைகளும் செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தது. அன்றிலிருந்து இன்று வரை இன மத, பேதமின்றிச் சகலராலும் இம்மைதானம் உபயோகப்பட்டு வந்தமை அனைவருக்கும் தெரிந்த விடயமே. இது இன உறவுகளுக்கு ஒரு பாலமாகவும் திகழ்ந்தது.

கடந்த சில மாதங்களின் முன்னர் இம்மைதானத்தை ஏறாவூர் நகர சபையின் முதல்வராக இருந்த அலிசாகிர் மௌலானா அவர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கமைய இம்மைதானத்தை ஏறாவூர் பொலிஸ் நிலைய விடுதி அமைத்தற்கு முயற்சித்தார் (பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பெரிய காணி ஏறாவூர் பிரதான வீதியில் உள்ளது.) இது தமிழர்களின் காணியை அபகரிக்கும் திட்டமாகும். இது இரு இனங்களுக்குமிடையில் கசப்பான உணர்வை ஏற்படுத்தக்கூடிய செயலாகும். இது தொடர்பாக 21-05-2014 ந் திகதி எழுத்து மூலம் தங்களுக்கு சமர்ப்பித்திருந்தோம். அதன் பிரகாரம் அது இடைநிறுத்தப்பட்டது. தற்போது மீண்;டும் நீதிமன்றக் களஞ்சியத்திற்காக சிறுவர் பூங்காவிற்காக அமைக்கப்பட்ட அத்திவாரம் அகற்றப்பட்டு தற்பொழுது வேலைகள் ஆரம்பிப்பதற்காக பொருட்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதனையும் ஊர்மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இதனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இதனை மீண்டும் தங்களுடைய கவனத்திற்கு கொhண்டு வருகின்றோம். இதை தாங்கள் உடனடியாக தடைசெய்து ஏறாவூர்-4, எல்லைநகர், ஐயங்கேணி, செங்கலடி-1  தமிழ் பகுதிகளுக்காக உள்ள ஒரே ஒரு மைதானம் இதுவாகும். எனவே இவ் விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்தும், சிறுவர் பூங்கா ஒன்றினை  அமைப்பதற்கு ஆவனை செய்து தருமாறு அதில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.