சுவிஸ் உதயத்தினால் இரண்டாம் கட்ட நிதியுதவி வழங்கும் நிகழ்வு

(எம்.ஏ.றமீஸ்)
வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ் உதயத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விக்கான உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இவ்வருடம் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட நிதியுதவி வழங்கும் நிகழ்வு  கிழக்கு மாகாணத்தின் கல்முனை-பாண்டிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றது.

கிழக்கு உதயம் அமைப்பின் உப தலைவரும் ஓய்வு நிலை அதிபருமான பாவாணர் அக்கரைப்பாக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது சுவிஸ் உதயம் அமைப்பின் உதவிப் பொருளாளர் சங்கரப்பிள்ளை சுபாஸ்கோ பிரதம் அதிதியாகக் கலந்து கொண்டு காசோலையினை வழங்கி வைத்தார்.
இதன்போது கலந்து கொண்ட சுவிஸ் உதயம் அமைப்பின் உதவிப் பொருளாளர் சங்கரப்பிள்ளை சுபாஸ்கோ கருத்துத் தெரிவிக்கையில், நமது சமூகம் தற்போது கல்வித் துறையில் பின்னிற்பதைப் பார்க்கின்றபோது மனதிற்கு மிகுந்த கவலையினைத் தருகின்றது. சந்தர்ப்ப சூழ்நிலையினால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் கல்வி கற்று முன்னேற பின்னிற்கக் கூடாது.
கல்வியானது எமது அனைத்து பின்னடைவுகளையும் சரி செய்யக் கூடிய ஆயுதமாகும். கல்வியினை முறையாகக் கற்று வாழ்வில் வளம் பெறும் நோக்கில் எமது அமைப்பு பல்லாயிரக் கணக்கான மாணவர்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. மனித உழைப்பின் மூலம் பெறப்படும் இந்நிதியினைக் கொண்டு செய்யப்படும் இவ்வுதவிகள் மூலம் சிறந்த அடைவினை மாணவர்கள் பெற்றுக் கொள்வார்களாயின் அதுவே எமது நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகும் என்றார்.