சுற்றாடல் தகவல் நிலையத்திறப்பு விழாவும் மாவட்ட சுற்றாடல் சட்டதிட்ட அமுலாக்கல் குழுக் கூட்டமும் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களத்தில் நடைபெற்றது.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு இந்த சுற்றாடல் தகவல் நிலையத்தினைத்திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கோகுலதீபன் தலைமையில் நடைபெற்ற சுற்றாடல் தகவல் நிலையத்திறப்பு விழாவினைத் தொடர்ந்து மாவட்ட சுற்றாடல் சட்டதிட்ட அமுலாக்கல் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது, மாவட்டத்திலுள்ள சுற்றாடல் பிரச்சினைகள், வாவிகளைப் பாதுகாப்பது, மணல் அகழ்வு, சுற்றாடல் பாகாப்புகள், கழிவுகள் அகற்றப்படுதல், சட்டவிரோத வாவி கையகப்படுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டன.
சுற்றாடல் தகவல் நிலையமானது, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கலையோர வளங்கள், சுற்றாடல் தொடர்பான தகவல்கள், ஆய்வுகளுக்கான உதவிகள் எனப்பல்வேறு தகவல்களையும் வழங்கும் வகையில் இலவச வை பை தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளமையானது குறிப்பிடத்தக்கதாகும்.




















