மதுபானசாலையினை மூடக் கோரி பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

(சமி)அம்பாரை நாவிதன்வெளி பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்ட வேப்பையடி மதுபானசாலையினை உடனடியாக மூடவேண்டும் என அப்பகுதி பொதுமக்களால் வியாழக்கிழமை 30 திகதி காலை வீரமுனை வேப்பையடி பிரதான வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் நடாத்தினர்

கடந்த 9 வருடங்களாக இயங்கிவரும் இவ் மதுபான சாலைக்கு அருகில் பாடசாலை,வைத்தியசாலை ஆலயங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் இருப்பதுடன் பாரிய சமூக சீர்கேடுகளும் இடம்பெறுவதக குற்றம் சுமத்தி அதிகமான பெண்களே இவ்ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

இவ் ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணகியம்மன் ஆலய தலைவர் தலைமையில் வேப்பையடி பாமடியில் ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பியவாறு வேப்பையடி பிரதான வீதிக்கு வருகை தந்து மதுபானசாலைக்கு முன்னால் கோசம் எழுப்பினர் பின்னார் வீதியினை மறித்து போராட்டம் நடத்தப்பட்டது

ஆர்ப்பாட்டக்காரர்கள் மதுபானசாலையினை அகற்றி மதுவுக்கு அடிமையானவர்களைக் காப்பாற்று ,மதுபான சாலையினை மூடி எங்கள் கணவர்களை காப்பாற்று பாடசாலை மாணவர்கள் மதுபானசாலை இருப்பதனால் மதுவுக்கு அடிமையாகிவருவதை எடுக்க உதவுங்கள் ,ஆலயம் பாடசாலைக்கு அருகில் இருக்கும் மதுபானசாலையினை மூடுங்கள் போன்ற கோசங்களை  எழுதிய சுலோப அட்டைகளை பெண்கள் ஏந்தி நின்றனர்

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு மட்டக்களப்புமாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் பொன்செல்வராசா கிழக்குமாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் நாவிதன்வெளி பிரதேசசபைத்தவிசாளர் சி.குணரெட்ணம் பிரதேசசெயலாளர் சு.கரன்  மற்றும் இந்து கிருஸ்தவ பௌத்த மதகுருமார் உள்ளிட்டோர் வருகை தந்திருந்ததுடன் 11 பொது அமைப்புக்கள் கையொப்பமிட்ட மகஜர் பிரதேசசெயலாளரிடமும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்குமாகாணசபைஉறுப்பினர் சமயத்தலைவர்களிடமும் கையளிக்கப்பட்டதுடன் பிரதேசசெயலாளர் மதுபானசாலையினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன்பிற்பாடு ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தினை விட்டுச்சென்றனர்.