சுவிஸ் உதயத்தின் கற்றல் மேம்பாட்டுக்கான உதவி

(எம்.ஏ.றமீஸ்)
கடந்த கால அசாதாரண சூழ்நிலையில் பதிக்கப்பட்டும் வறுமை நிலையிலும் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய  மாணவரகளின் கற்றல் மேம்பாட்டுக்கென 22 இலட்சத்து 26 ஆயிரம் ரூபா நிதியினை வழங்க சுவிஸ் உதயம் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.


இப்பாடசாலையில் கல்வி பயிலும் சித்தாண்டி, மாவடிவேம்பு, ஈரளக்குளம், திகிலிவெட்டை, சந்திவெளி போன்ற கிராமங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டின்கீழ் உள்ள மாணவர்களின் நிலைமையினை சுவிஸ் உதயம் அமைப்பினர் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று(06) திங்கட்கிழமை சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கல்குடா கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் தி.ரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் பிரபல சமூக சேவையாளருமான கே.துரைநாயகம், கிழக்கு உதயம் அமைப்பின் தலைவரும் ஓய்வு நிலை பிரதிக்கல்விப் பணிப்பாளருமான எம்.விமலநாதன், கிழக்கு உதயம் அமைப்பின் உப தலைவரும் ஓய்வு நிலை அதிபருமான பாவாணர் அக்கரைப்பாக்கியன், அதிபர்களான க.பகீரதன், அ.தவனேஸ்வரன், ஆசிரியர் க.தேவராசா உள்ளிட்ட மாணவர்களின் பெற்றோரகள் பாதுகாவலர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
இப்பாடசாலையில் கல்வி பயிலும் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட  வறுமை நிலையில் உள்ள 62 மாணவர்களுக்காக மாதாந்தம் 42 ஆயிரம் ரூபா நிதியுதவி கற்றல் மேம்பாட்டுக்கென தேவைப்படுவதாகவும், இத்திட்டத்தில் இப்பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 9 முதல் 13 வரை உள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இவ் ஐந்தாண்டுத் திட்டத்திற்கென 22 இலட்சத்து 26 ஆயிரம் ரூபா நிதியுதவி தேவைப்படுவதால் அந்நிதியினை மாதாந்தம் வழங்குவதென சுவிஸ் உதயம் அமைப்பினரால் இதன்போது வாக்குறுதி வழங்கப்பட்டது. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கென உதவி வரும் சுவிஸ் உதயம் அமைப்பின் செயற்திட்டத்தில் இப்பாடசாலை மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டு எதிர் வரும் மாதத்திலிருந்து இவர்களுக்கான நிதி வழங்கப்படவுள்ளது.
இதன்போது உரையாற்றிய சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் பிரபல சமூக சேவையாளருமான கே.துரைநாயகம் குறிப்பிடுகையில், ஒருவரது வாழ்வில் கல்வி அறிவு கிடைப்பது அடிப்படை உரிமையாகும். கல்வி கற்பதை மாணவர்கள் இடை நடுவில் கைவிடக்கூடாது. கற்பதற்கு வறுமை நிலையைக் காட்டி எத்தனையோ மாணவர்கள் கல்வியை கைவிடுகின்றனர். வறுமையை காரணமாக நினைத்து கற்றலை பாதியில் கைவிட்டிருந்தால் இன்று எத்தனையோ வரலாற்றில் தடம் பதித்தவர்களை நாம் அறிந்திருக்கவே முடியாது.
தோல்வியினையும் வறுமையினையும் கண்டு மாணவர்கள் துவண்டு விடக்கூடாது. போராடி வெற்றி பெறுவதில்தான் பாரிய சுகம் இருக்கின்றது.
கடல் கடந்து உறவுகளை பிரிந்து உணர்வுகளுக்கு கடிவாளமிட்டு துன்பங்கள் பலவற்றைச் சந்தித்து நாம் உழகை;கும் ஒரு தொகைப் பணத்தினை எமது அமைபிற்கு வழங்கி அதன்மூலம் நமது நாட்டின் கிழக்கு மாகாணத்தில் வாழும் வறுமை நிலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் வாழ்வாதார உதவிக்கெனவும் உதவி வருகின்றோம்.
நாம் செலவு செய்யும் பணத்திற்கு தக்க பிரயோசனம் கிட்ட வேண்டும். பெற்றோரும் அதனோடிணைந்தவர்களும் எமது முயற்சிக்கு பக்க பலமாக நின்று செயற்பட வேண்டும். எமது உதவி மூலம் மாணவர்கள் உயர் நிலை பெறுவதை பார்க்கின்றபோது எமது அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகின்றன. எமது அமைப்பு பாடசாலை மாணவர்கள், கல்விக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் போன்றோருக்கு பல மில்லியன் ரூபா பணத்தினை மாதாந்தம் செலவு  செய்து வருகின்றது என்றார்.